Header Ads

ஹமாஸ் அழிக்கப்படும் வரை இஸ்ரேல் ஓயாது: புடினுடனான உரையாடலில் நேதன்யாகு உறுதி


ஹமாஸ் அமைப்பின் இராணுவ மற்றம் அரசு நிர்வாகத் திறனை அழித்தொழிக்கும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான தொலைபேசி உரையாடலின்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உறுதியாக தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிராக கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை தொடங்கினர். இதில், இஸ்ரேல் தரப்பில் 1,400 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதலில் 2 ஆயிரத்துக்கும் 800 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், மனிதாபிமான அடிப்படையில் அங்கு போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் ரஷ்யா தீர்மானம் கொண்டு வந்தது. எனினும், அந்த தீர்மானத்தில் ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்படாததை சுட்டிக்காட்டி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார். இதனை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. 'கொடூர கொலைகாரர்களால் இஸ்ரேல் தாக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமான ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் இராணுவ மற்றும் ஆட்சி நிர்வாக திறனை அழித்தொழிக்கும் வரை தாக்குதல் தொடரும். இதில், இஸ்ரேல் ஒன்றுபட்டு உறுதியாக உள்ளது. ஹமாஸ் அமைப்பினரை அழித்தொழிக்கும் வரை இஸ்ரேலிய இராணுவம் ஓயாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், நேதன்யாகு உடன் தொலைபேசியில் உரையாடியதை உறுதிப்படுத்தி உள்ள ரஷ்ய வெளிவிவகாரஅமைச்சகம்,  இஸ்ரேல் - காசா இடையே வன்முறை மேலும் தீவிரம் அடையாமல் இருக்க ரஷ்யா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். இரு தரப்புக்கும் இடையேயான இந்தத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஜனாதிபதி புடின் எடுத்துரைத்தார். இந்த உரையாடலின்போது, இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகு, எகிப்து, ஈரான், சிரியா, பாலஸ்தீன தலைவர்களுடன் நடத்திய உரையாடலின் முக்கிய தகவல்களை தெரிவிப்பதில் மிகவும் குறிப்பாக இருந்தார். அப்போது, இஸ்ரேலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை புடின் தெரிவித்தார்.

மேலும், தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்படுவதன் அவசியத்தையும், மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வலியுறுத்தினார். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இரு தரப்பும் அரசியல் மற்றும் தூதரக ரீதியில் செயல்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி விளாடிமிர் புடின் விளக்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, காசா மீது தரை வழித் தாக்குதலுக்காக இஸ்ரேல் தனது படையை எல்லையில் தயார் நிலையில் வைத்துள்ளது. ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதற்கான திட்டத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால், காசா - இஸ்ரேல் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.



No comments

Powered by Blogger.