சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துக்களில் சிக்கி 14 பேர் பலி!
சிவகாசி அருகே வெவ்வேறு இடங்களில் உள்ள இரு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துக்களில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபா நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிவகாசி அருகே புதுப்பட்டி பொலிஸ் நிலையத்துக்கு உட்பட ரெங்கபாளையம் கம்மாபட்டி பகுதியில் பட்டாசு ஆலை ஒன்றும் அதனுடன் பட்டாசு விற்பனை கடையும் உள்ளது. இந்த ஆலையில் 50 இற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். பட்டாசு ஆலையில் பணிபுரிந்த சுமார் 15 தொழிலாளர்கள் பட்டாசு கடையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த ஆலையில் இன்று மதியம் உணவு இடைவேலையின்போது, உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்து சோதனை செய்து பார்த்து உள்ளனர். அப்போது அருகே இருந்த பட்டாசு விற்பனை கடையில் தீப்பொறி பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு கடையில் மதிய உணவு சாப்பிட்டு கொண்டு இருந்த 9 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் மேலும் நால்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்தது. இதனிடையே, சிவகாசிக்கு அருகே மாரனேரி கீச்சநாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலையில் சக்கரம் ரக பட்டாசு உற்பத்திக்காக மருந்து கலவை செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மாரனேரி கிராமம், கிச்சநாயக்கன்பட்டி மற்றும் சிவகாசி அருகேயுள்ள, மங்களம் கிராமம் ஆகிய இரு வேறு இடங்களில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலைகளில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோர் குறித்த துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments