Header Ads

மின் விசிறியில் மோதி மாணவன் பலி: பாடசாலை அதிபருக்கு இடமாற்றம்

 

புசல்லாவையில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவன் வகுப்பறையில் இருந்த மின் விசிறியில் மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரி பெற்றோர் நேற்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, குறித்த பாடசாலையின் அதிபர்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என கம்பளை வலயக் கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

புசல்லாவையில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 10-இல் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவன் நேற்று முன்தினம் பிற்பகல் 1.25 மணியளவில் கதிரை மீதேறி மேசையில் ஏறுவதற்கு முற்பட்ட வேளை  அவரது தலை மின் விசிறியில்  மோதியது.

இதன்போது, காயமடைந்த மாணவன் வகுக்கபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது உயிரிழந்தார்.

புப்புரெஸ்ஸ டெல்டா தெற்கு பகுதியை சேர்ந்த 14  வயதான  ராஜரத்தினம் சதுர்சன் என்ற மாணவனே இவ்வாறு  உயிரிழந்தார்.

இந்த நிலையில் பெற்றோரும் பழைய மாணவர்களும் நேற்று காலை பாடசாலை முன்பாக ஒன்று கூடியிருந்தனர்.

கம்பளை வலயக் கல்விப் பணிப்பாளர் பாடசாலைக்கு சென்று நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர்  அதிபரை  இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பாடசாலையின் மாணவர்களுக்கும் நேற்று  விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

பாடசாலைக்கு முன்பாக ஒன்றுகூடியிருந்த பெற்றோரும் பழைய மாணவர்களும் பேரணியாக வகுக்கப்பிட்டிய பிரதேச வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பை வெளி ப்படுத்தினர்.

சிகிச்சையளிப்பதில் ஏற்பட்ட தாமதமே மாணவனின் மரணத்திற்கு காரணம் என இதன்போது அவர்கள் குற்றம் சுமத்தினர்.

 உயிரிழந்த மாணவனின் சடலம் கண்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

மேலதிக விசாரணைகளை புசல்லாவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



No comments

Powered by Blogger.