Header Ads

விஜயின் 'லியோ' படத்திற்கு நெருக்கடி: தி.மு.க. அரசு மீது சீமான் குற்றச்சாட்டு


நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் 'லியோ' திரைப்படத்திற்கு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வரும் நெருக்கடிகள் அரசியல் நோக்கம் கொண்டது எனவும் வேண்டுமென்றே விஜயை தி.மு.க. அரசு தொந்தரவு செய்கிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

'லியோ’ திரைப் படத்தை வைத்து அரசியல் செய்யவில்லை என்று சொல்வதே ஒரு அரசியல்தான். ஏனைய படங்களுக்கு எல்லாம் வழங்கப்படாத நெருக்கடி ஏன் விஜய் நடித்துள்ள படத்திற்கு மட்டும் தரப்படுகிறது. பொலிசார் பாதுகாப்பு எல்லாம் தேவை இல்லாத வேலை. இதேபோல ஏன் ஜெயிலர் படத்திற்கு செய்யவில்லை.

தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசு விஜயை தொந்தரவு செய்வது வெளிப்படையாக தெரிகிறது. இதற்கு முன்பு வெளியான விஜய் படங்களுக்கு கூட இவ்வளவு நெருக்கடி இல்லை. அதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது.

சினிமா வியாபாரம் பெருகிவிட்ட நிலையில் சிறப்புக் காட்சிகள் இருந்தால்தான் லாபம் கிடைக்கும். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதியளிப்போம் என்று தெரிவித்துள்ளார். 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் ஒக்டோபர் 19 ஆம் திகதி திரைக்கு வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகும் இந்த படத்தை திரையிடும்போது, பார்வையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள், போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தக் கூடாது மற்றும் அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக் கூடாது என சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.