இலங்கையின் உத்தேச சட்டமூலங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் கவனம்
இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வரும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், நிகழ்நிலை காப்பு சட்டமூலங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த இரண்டு உத்தேச சட்டமூலங்கள் ஊடாகவும் அதிகாரிகளுக்கு விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது எனவும் இந்த சட்டமூலங்கள் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு ஏற்புடையவையாக இல்லை என்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடகப்பேச்சாளர் ராவின் ஷம்டாசனி தெரிவித்துள்ளார்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், நிகழ்நிலை காப்பு சட்டமூலங்கள் கருத்து சுதந்திரம், அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமைகளை மட்டுப்படுத்துகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதம் தொடர்பான வரையறை நீதித்துறையின் போதிய மேற்பார்வையின்றி தனி நபர்களை விசாரணை செய்வதற்கும் காண்காணிப்பதற்கும் தடுத்து வைப்பதற்கும் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் பரந்த அதிகாரங்களை வழங்குகிறது என மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் உள்ள பல சரத்துகள் தெளிவில்லாமலும் வரையறுக்கப்படாமலும் உள்ளது என
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடகப்பேச்சாளர் ராவின் ஷம்டாசனி தெரிவித்துள்ளார்.
இதனால் இது சுதந்திரத்தை பாதிக்கும் என்பதுடன், சட்டபூர்வமான வெளிப்பாடுகளையும் குற்றமாகக் காண்பதாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடகப்பேச்சாளர் ராவின் ஷம்டாசனி சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments