மணிப்பூரில் வீடுகளுக்கு தீ வைப்பு: மீண்டும் பதற்றம், பாதுகாப்பு அதிகரிப்பு
கடந்த மே மாதம் கலவரத்தால் பற்றி எரிந்த மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு திரும்பு சூழலில், நேற்று முன்தினம் இரவு இரண்டு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடைபெற்றதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் தலைநகர் இம்பாலின் மேற்கு மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு 10 மணியளவில் பாஸ்தோய் பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட நியூ கெய்தெல்மாம்பி பகுதியில் இரவு 10 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு வீடுகள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், அந்த வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்புப் படையினர் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சம்பவ இடத்தைச் சுற்றி மைதேயி இனப் பெண்கள் திரண்டனர். ஆனால், பாதுகாப்புப் படையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மணிப்பூரில் முதல்வர் பைரன் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் சுமார் 53 சதவீதம் பேர் மைதேயி சமூகத்தையும் மீதமுள்ளவர்கள் குகி, நாகா உள்ளிட்ட சமூகத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். மைதேயி சமூகத்தில் பெரும்பாலானோர் இந்து மதத்தையும், குகி, நாகா சமூகத்தில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுகின்றனர். மணிப்பூர் தலைநகர் இம்பால் மற்றும் அதனை அண்மித்த பள்ளத்தாக்கு பகுதிகளில் மைதேயி சமூகத்தினரும் வனப்பகுதிகளில் குகி, நாகா சமூகத்தினரும் வசிக்கின்றனர்.
மணிப்பூரில் இதுவரை பதவி வகித்த 12 முதல்வர்களில் 10 பேர் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள். தற்போதைய முதல்வர் பிரேன் சிங்கும் இந்த சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். மணிப்பூரில் ஆட்சி, அதிகாரத்தில் மைதேயி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் வனப்பகுதி மீட்புப் பணி என்ற பெயரில் குகி, நாகா சமூகத்தினரின் வாழ்விடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன என குற்றம் சாட்டப்படுகிறது.
இந்தச் சூழலில் குகி, நாகா சமூகத்தினரை போன்று தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனால் தங்களது உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்படும் என்று குகி, நாகா சமூகத்தினர் கடந்த மே 3 ஆம் திகதி போராட்டத்தை தொடங்கினர்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3 ஆம் திகதி மோதல் ஏற்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர்.
No comments