Header Ads

காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட சிறுமியினுடைய கையின் ஒரு பகுதி துண்டிப்பு


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு கையின் ஒரு பகுதி சத்திரசிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

மல்லாகம் - பகுதியைச் சேர்ந்த 8 வயதான சிறுமி ஒருவருக்கே இவ்வாறு கையின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

4 நாட்களாக குறித்த சிறுமிக்கு காய்ச்சல் நிலவியதை அடுத்து தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்ற போதிலும் அவர் குணமடையாமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த சிறுமிக்கு, உடலுக்கு மருந்துகளை செலுத்தும் கெணுலா பொறுத்தப்பட்டு அதனூடாக மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கெணுலா பொறுத்தப்பட்ட கை செயலிழந்தமையை அடுத்து வைத்தியர்கள் அவரது கையின் ஒரு பகுதியை சத்திரசிகிச்சை மேற்கொண்டு துண்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் த.சத்தியமூர்த்தி கருத்து தெரிவிக்கையில், குறித்த சம்பவம் உண்மை எனவும் அது தொடர்பில் இன்றைய தினம் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இதற்காக விசாரணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் விசாரணைகளின் பின்னரே கை துண்டிக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவரும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். 



No comments

Powered by Blogger.