Header Ads

சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் தயார்: நீதி அமைச்சர் விஜயதாச அறிவிப்பு


உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச விசாரணைக்கும் அரசாங்கம் தயார் எனவும் சனல் 4 காணொளியில் வெளியிடப்பட்டவாறு சம்பவம் நடந்திருந்தால் அது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும்  நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது நீதி அமைச்சர் விஜயதாச மேலும் தெரிவிக்கையில்,  

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நேரத்தில், எமது நாட்டுக்கு எதிராக பல்வேறு அறிக்கைகளும் காணொளிகளும் வெளியிடப்படுகின்றன.

புலம்பெயர்ந்தோர் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.  அவர்களின் பிரச்சினைகள் குறித்து புலம்பெயர் தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளோம்.

அத்துடன் ஈஸ்டர்  தாக்குதலுக்கு 29 மாதங்களுக்கு முன்னர் இது குறித்து பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றினேன்.

அப்போதிருந்த அரச ஊடக பேச்சாளர் உள்ளிட்டோர் என் மீது குற்றச் சாட்டுக்களை முன்வைத்தனர்.. தேசிய ஒருமைப்பாட்டைக் சீர்குலைக்கவே நான் இவ்வாறு கூறியதாக அவர்கள் கூறினர். இன்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிலர் இந்த விடயம் தொடர்பில் மிகுந்த ஆர்வத்துடன் பேசுகின்றனர். அன்று நான் அந்த அறிக்கையை வெளியிட்ட போது கூச்சல் போட்டவர்களே இவர்கள்.

அன்று நான் கூறி 29 மாதங்களுக்குப் பிறகு அனைவரின் கண்களும் திறக்கப்பட்டுள்ளன.  அன்று எனது அறிக்கையை ஆராய்ந்திருந்தால் அந்த மக்கள் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி இருக்கிறார் என முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தான் ஓய்வுபெற்று செல்லும் போதே கூறியிருந்தார். ஆனால் அவரிடம் இது தொடர்பில் வாக்குமூலம் பெறச் செல்லும் போது நீதிமன்றம் ஊடாக அதற்கு தடையை பெற்றுக்கொண்டார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக தற்போது 42 வழக்குகள் உள்ளன. அதேபோன்று தாக்குதல் தொடர்பாக உள்நாட்டில் அல்லாமல் சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் தயாராக உள்ளோம். இன்று சர்வதேச விசாரணைகளை கோருபவர்கள் தாக்குதலின் போது அரசாங்கத்தில் இருந்தனர்.

சனல் 4 என்பது புலம்பெயர் மக்களுடன் இணைந்து செயற்படும் ஒரு ஊடக அமைப்பாகும். அந்த ஊடகம் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் இறந்த மக்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்கும் நேர்மையான எண்ணத்தில் இருக்கும் அமைப்பல்ல.

எவ்வாறாயினும் சனல் 4 ஒளிபரப்பியவாறு சம்பவம் நடந்திருந்தால் அது தொடர்பில் ஆராயப்படும். இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.



No comments

Powered by Blogger.