Header Ads

ஆமைகளின் உயிரிழப்பிற்கு காரணமான கடலுக்குள் ஏற்பட்ட வெடிப்பு

ஆமைகளின் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்த கடலுக்குள் ஏற்பட்ட வெடிப்புகள் தொடர்பில் ஆராயுமாறு, விடயத்திற்கு பொறுப்பான தரப்பினருக்கு அறிவித்தப்பட்டுள்ளது என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாரா நிறுவனம், கடற்றொழில் திணைக்களம், கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் கரையொதுங்கிய ஆமைகளின் உடல்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவற்றில் பெரும்பாலானவை கடலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளன என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையான டைனமைட் எனப்படும் வெடிமருந்துகளை பயன்படுத்தியதன் காரணமாக கடலில் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், நாட்டின் மேற்கு கடற்பரப்பில் இவ்வாறான மீன்பிடி முறைகளின் பயன்பாடு குறைவாகவே காணப்படுகிறது என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த வெடிப்புகள் தொடர்பான நிச்சயமான தகவல்களை வெளிப்படுத்துவதன் மூலம் ஆமைகள் மட்டுமன்றி ஏனைய கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது முக்கியமானது என திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு மாத காலப்பகுதிக்குள், நாட்டின் மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு கடற்கரைகளில் சுமார் 40 ஆமைகளின் உடல்கள் கரையொதுங்கின.

யாழ்.நெடுந்தீவு கடற்கரையிலும் உயிரிழந்த 2  ஆமைகளின் உடல்கள் கரையொதுங்கியிருந்தன என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  



No comments

Powered by Blogger.