Header Ads

பெருவில் 544 மாவட்டங்களில் அவசரகால நிலை பிரகடனம்!


பெருவில் நேற்று முன்தினம் முதல் 2 மாத காலத்திற்கு 544 மாவட்டங்களுக்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 

எல் நினோ நிகழ்வினால் அங்கு பெரும் வறட்சியும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படவிருக்கிறது என விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

நிலைமையை சமாளிக்க அந்நாட்டின் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்க அமைப்புகளும் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனமும் ஒருங்கிணைந்து செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன. 

இந்த நிலையில், அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பின் பொது சபையின் சந்திப்பில் பேசிய பெரு நாட்டு ஜனாதிபதி டினா பொலுவார்டே எல் நினோ நிகழ்வை எதிர்கொள்ள பன்னாட்டு கூட்டு முயற்சியும் ஒப்பந்தமும் அவசியம் என வலியுறுத்தியுள்ளார். 

மத்திய மற்றும் கிழக்கு பசுபிக் கடலின் மேற்புரத்தில் ஏற்படும் அதிகப்படியான வெப்பமயமாதலால் உலகின் பல நாடுகளில் பருவகால மாற்றங்களில் - சில வருட கால இடைவெளிகளில் - ஒரு சமச்சீரற்ற நிலை உருவாகிறது. 

இதன் காரணமாக அதிக வறட்சி, அதிக மழைப்பொழிவு என வானியல் சூழ்நிலை மாறி மாறி நிகழ்கிறது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடும், வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களும் அதிகம் உருவாகின்றன. 

இந்நிகழ்வை 'எல் நினோ' என சுற்றுச்சூழலியலாளர்கள் அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



No comments

Powered by Blogger.