கனடாவிலுள்ள தமது பிரஜைகளுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை
கனடாவில் உள்ள தமது பிரஜைகளை இந்தியத் தூதரகங்களில் பதிவு செய்யுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் போது அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என இந்தியாவிலுள்ள தமது பிரஜைகளுக்கு கனடா பயண ஆலோசனையை வெளியிட்டிருந்தது.
குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட சில மணி நேரங்களுக்கு பின்னர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக, கனடாவிலுள்ள தமது தூதரகத்துடன் தொடர்ந்தும் தொடர்பினை மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாவில், கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்புபட்டுள்ளனர் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்தநிலையில், ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் உள்ள தூதரக அதிகாரி பவன் குமார் ராயை, வெளியேற்றுகிறோம் என அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி அறிவித்தார்.
அதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சு, தமது நாட்டிலுள்ள கனேடிய தூதரக அதிகாரி ஒருவருக்கு ஐந்து நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டது.
இந்தநிலையில், கனடா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கனடாவிலுள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க்கவேண்டும் என அறிவுறுத்தபபட்டுள்ளது.
அத்துடன், ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் அல்லது டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பதிவு செய்ய வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
No comments