வெளிநாட்டில் 3 இலங்கையர்கள் மரணம் - இருவர் கைது!
மலேசியா, செந்தூலில் உள்ள வீடொன்றில் அண்மையில், சடலமாக மீட்கப்பட்ட 3 இலங்கையர்களின் மரணம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு இலங்கையர்கள் சரணடைந்துள்ளதாக அந்தநாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள் மீட்கப்பட்ட வீடு இலங்கையர் ஒருவருக்கு சொந்தமானது எனவும் உயிரிழந்தவர்களில் ஒருவர் குறித்த வீட்டு உரிமையாளரின் மகன் எனவும் அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த 3 பேரும், பிளாஸ்டிக் பைகளால், மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுவதாக செந்தூல் காவல்துறையின் தலைமை உதவி ஆணையாளர் அஹ்மட் சுகர்னோ மொஹமட் ஜஹாரி தெரிவித்துள்ளார்.
எனினும், கொலைக்கான காரணத்தை காவல்துறையினர் இன்னும் கண்டறியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இலங்கை தூதரகத்திற்கு அறிவித்துள்ள போதிலும், அதற்கான பதிலளிப்புகள், எதுவும் கிடைக்கப்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வார இறுதியில் செந்தூல், கம்போங்கோவில் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குறித்த மூன்று இலங்கையர்களும் கை, கால்கள் கட்டப்பட்டு, தலைகள் பிளாஸ்டிக் பைகளால் மூடப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம், தொடர்பில் உயிரிழந்தவர்களின் வீட்டுக்கு வந்து தற்காலிகமாக தங்கியிருந்ததாக கூறப்படும் இந்த இரண்டு இலங்கையர்கள் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று வர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments