Header Ads

ஆப்கானிஸ்தானில் பாரிய பொருளாதார நெருக்கடி!

ஆப்கானிஸ்தானை தலிபான் அமைப்பு கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அங்கு பொருளாதார நெருக்கடி காரணமாக கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சர்வதேச அமைப்புகள் தொடர்ந்தும் கவலை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் 1.55 கோடி மக்கள் கடுமையான உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என  சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக நிலவி வரும் வறட்சி மற்றும் 2 ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடி ஆகியவை மக்களின் தேவைகளை அதிகப்படுத்தியிருக்கிறது என செஞ்சிலுவை சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் 27 லட்சம் மக்கள் நீண்ட கால உணவு பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என  கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பெரிய பொருளாதார திட்டங்களை அரசு தொடங்கியிருக்கிறது என  தலிபான் அரசின் பொருளாதார அமைச்சகம் கூறியுள்ளது.

உணவு பற்றாக்குறையால் தவித்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு  உதவும் விதமாக, ஐ.நா. சர்வதேச உணவு திட்டத்துடன் இணைந்து இந்தியா கோதுமை வழங்குகிறது.

இந்தியா இதுவரை ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. சர்வதேச உணவு திட்ட மையங்களுக்கு மொத்தம் 47,500 மெட்ரிக் தொன் கோதுமை வழங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள 1.6 கோடி மக்களை பாதுகாப்பதற்கான உணவை வழங்க இந்தியா உதவியதற்கு ஐ.நா. சர்வதேச உணவு திட்ட மையம் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



No comments

Powered by Blogger.