Header Ads

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்த தீர்வு: தமிழக முதல்வர் தெரிவிப்பு


இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்த தீர்வாக அமையும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரம் - மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மீனவர் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஒவ்வொரு தடவையும் தாம் பிரதமர் மோடியை வலியுறுத்தி வருகிறோம் எனினும் இதுவரை எவ்வித தீர்வுகளும் வழங்கப்படவில்லை எனவும் கச்சதீவை தி.மு.க. அரசே இலங்கைக்கு தாரைவார்த்தது என வரலாறு தெரியாமல் பிரதமர் மோடி கூறியுள்ளார் என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவு எந்தவொரு காலத்திலும் இலங்கைக்கு சொந்தமானது என வரைபடங்களில் கூட கூறப்படவில்லை எனவும் இந்திய வரைபடத்துடன் இணைக்கப்பட்டதாகவே உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு கச்சத்தீவை தாரைவார்த்தமையின் ஊடாக இந்தியாவை விட தமிழகத்திற்கே அதிகளவான பாதிப்பு என தி.மு.கவினரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டப்பட்டது எனவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எனவே, கச்சத்தீவு விவகாரத்தில் அதற்கான ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை தூதரக ரீதியாக பா.ஜ.க. தலைமையிலான இந்திய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமெனவும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் தி.மு.க அரசு உறுதியாக உள்ளது எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் தமிழர் போராட்டம் எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அப்போதிலிருந்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும் ஆரம்பிக்கப்பட்டது என ஸ்டாலின் கூறியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜ.க. ஆட்சி அமைக்கப்பட்ட பின்னரே தமிழக மீகவர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகள் அதிகரித்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களின் படகுகளே அடிப்படையாக அமைந்துள்ள நிலையில், அவற்றை கைப்பற்றுவதும் வலைகளை அறுத்தெறிவதும் இலங்கை அரசாங்கத்தின் தொடர்கதையாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே கைது, சிறைவாசம் என்பவற்றைத் தாண்டி, மீனவர்களின் படகுகளை கைப்பற்றும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையை தாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.  



No comments

Powered by Blogger.