Header Ads

காலி சிறைச்சாலையில் பரவிய நோய் அடையாளம் காணப்பட்டது


காலி சிறைச்சாலையில் கைதிகளிடையே மெனிங்கோகாக்கல் (Meningococcal) எனப்படும் நோய் பரவிவருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோய் பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அதற்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையினூடாக நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சிறைச்சாலையில் இருந்து வெளியேறிய கைதிகள் மற்றும் அவர்களை பார்வையிடுவதற்காக வந்த உறவினர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

நோய் தாக்கத்திற்கு உள்ளான 2 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 07 பேர் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், காலி சிறைச்சாலையிலிருந்து கைதிகளை வெளியே கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் 2 வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கைதிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையும் 2 வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் கைதிகளை பார்வையிடவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.



No comments

Powered by Blogger.