Header Ads

குருந்தூர் மலை பொங்கலுக்கு அனுமதி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


தமிழர்களது பூர்வீக வழிபாட்டு இடமான குருந்தூர் மலையில் உள்ள ஆதி சிவன் ஐயனார் ஆலயம் அமைந்திருந்த பகுதியில் இன்று (18) மேற்கொள்ள உள்ள பொங்கல் நிகழ்விற்கு தடைவிதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து பொங்கல் நிகழ்வுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளை பிறப்பத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குருந்தூர் மலையில் தமிழர்கள் காலதி காலமாக வழிபாடு நடத்தி வந்த ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தை அழித்து அங்கு பௌத்த விகாரை ஒன்றை அமைத்து வருகின்றனர்.

ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் எதனையும் மேற்கொள்ள கூடாதென்ற நீதிமன்ற உத்தரவை கூட உதாசீனம் செய்தே அங்கு பௌத்த விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின் பெயரில் பௌத்த பிக்குகள் குருந்தூர் மலையை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் நிலையில் இலங்கை போலீசார் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் உள்ளிட்ட துறைகளும் இதற்கு துணையாக இருந்து வருகின்றன என்ற குற்றச்சாட்டு தமிழ் தரப்பினால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை பகுதியில் இன்று (18) வெள்ளிக்கிழமை பொங்கல் நிகழ்வை  முன்னெடுக்கவுள்ளதாக ஆதிசிவன் ஜயனார் ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்திருந்தார்கள்.

இதையடுத்து பெங்கல் நிகழ்வுக்கு தடைவிதிக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டு பொங்கல் நிகழ்வை தடுப்பதற்கு அதிகாரம் இல்லை எனத்தெரிவித்து நிபந்தனையுடன் அனுமதி வழங்கி கட்டளை பிறப்பித்துள்ளது.

2023.08.16 அன்று முல்லைத்தீவு வவுனியா மன்னார் தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஆர்.ரி. ஜெயதிலகவால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குருந்தூர் மலையில் இன்று (18) பொங்கல் இடம்பெற்றால் அங்கு வரும் குழுவினருக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு, அந்த கருத்து முரண்பாடு உணர்ச்சிகரமான விடயங்கள் என்பதால் மதக்கலவரமாக உருவாகி உயிர் ஆபத்து ஏற்படுத்தக்கூடும்.  

எனவே அந்த இடத்தின் அமைவிடத்தின் அடிப்படையில் அவ்வாறான ஒரு கலவரத்தை தடுப்பதற்கு மிகவும் கடினமாகும் என தெரிவித்து வழக்கு தொடுனர் சார்பில் முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ. ஆர். எம். ஏ. அமரசிங்கவால் 2023.08.16 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி. சரவணராஜா முன்னிலையில் AR/1028/23 எனும் வழக்கில் அறிக்கை ஒன்றை நேற்று தாக்கல் செய்து குற்றவியல் நடைமுறை கோவை பிரிவு 106 (01) கீழ் பொங்கல் வழிபாட்டுக்கு எதிராக தடை உத்தரவை கோரியுள்ளனர்.

இருப்பினும் இன்று (18) குருந்தூர் மலை பிரதேசத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பூசை வழிபாடுகளை மேற்றுக்கொள்வதற்கு அப்பிரதேச மக்களுக்கு உள்ள உரிமையை தடுப்பதற்கு வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமாக விகாரை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரருக்கோ அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ அல்லது அருண் சித்தார்த் என்பவருக்கோ அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ அல்லது இதற்கு பாதகம் செய்யும் பிரிவினவுக்கோ எந்தவிதமான அதிகாரமும் இல்லை என முல்லைத்தீவு நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது. 



No comments

Powered by Blogger.