இமாச்சல், உத்தராகண்ட் கனமழை, நிலச்சரிவு: 81 பேர் பலி, பஞ்சாபிலும் திடீர் வெள்ளம்
தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் இதுவரை 81 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இமாச்சலில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநிலத்தின் முதன்மைச் செயலாளர் ஒன்கர் சந்த் சர்மா கூறுகையில், கடந்த மூன்று தினங்களில் 71 பேர் உயிரிழந்தனர்.13 பேர் குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு வரை மொத்தம் 57 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் சிம்லா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு சம்மர் ஹில், ஃபாகி மற்றும் கிருஷ்ணாநகர் ஆகிய மூன்று பகுதிகள் நிலச்சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இமாச்சல் மாநிலத்தின் அவசர கால செயல்பாட்டு மையத்தின் தகவல்படி, கடந்த ஜூன் 24 திகதி பருவமழை தொடங்கியதில் இருந்து மழைத் தொடர்பான சம்பவங்களால் இதுவரை 214 பேர் உயிரிழந்தனர். 38 பேர் காணாமல் போய் உள்ளனர்.
சிம்லா மாவட்டத்தின் துணை ஆணையர் ஆதித்ய நேகி கூறுகையில், சம்மர் ஹில் மற்றும் கிருஷ்ணாநகர் பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சம்மர் ஹில் பகுதியில் இருந்து 13 உடல்களும், ஃபாஹி பகுதியில் 5 உடல்களும், கிருஷ்ணா நகர் பகுதியில் 2 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சம்மர் ஹில் சிவன் கோயிலின் அடியில் சில உடல்கள் சிக்கியிருக்கலாம். தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக கிருஷ்ணாநகரில் உள்ள 15 வீடுகளில் இருப்பவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நகரின் துணைப் பகுதிகளான இண்டோரா மற்றும் ஃபாட்பூரில் இருந்து 1,731 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் அனைத்தும் விமானப் படை ஹெலிகாப்டர்கள், இராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினரின் உதவியுடன் நடந்து வருகிறது என்று இணை ஆணையர் நிபுன் ஜிந்தால் தெரிவித்தார்.
No comments