Header Ads

மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார்!


எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்று உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அஜய் ராய் தெரிவித்துள்ளார். 

அதேபோல் வாரணாசியில் போட்டியிட பிரியங்கா காந்தி முடிவு செய்தால் அவருக்கு காங்கிரஸின் ஒவ்வொரு தொண்டரும் முழுமையாக ஒத்துழைப்பார்கள் என்றும் அவர் தெரிவசித்துள்ளார்.

உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அஜய் ராய்க்கு வாரணாசியில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கும் பா.ஜ.கவுக்கும்  எதிராக வாரணாசியில் தொடங்கிய அரசியல் போட்டி மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும் எடுத்துச் செல்லப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமருக்கு எதிராகப் போட்டியிட்டதற்காக உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவி கொடுக்கப்பட்டதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,  நான் ராகுல் காந்தியின் சிப்பாய். அதனால்தான் எனக்கு இந்தப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது எனது தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. 

ஆளும் பா.ஜ.கவின் பல்வேறு பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததால் என் மீது வழக்குகள் பாய்ந்தன. தேசிய பாதுகாப்புச் சட்டம் என் மீது பாய்ந்தது. அத்தனையையும் கடந்து நான் ராகுல் காந்தியின் சிப்பாயியாக இன்று இப்பதவிக்கு வந்துள்ளேன். இனி உத்தரப் பிரதேசத்தின்  கிழக்கே உள்ள சண்டவுலி முதல் மேற்கே உள்ள காசியாபாத் வரை காங்கிரஸ் தொண்டர்கள் என்னுடன் இணைந்து பா.ஜ.கவுக்கு எதிராகப் போராடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.



No comments

Powered by Blogger.