காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 22 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
கர்நாடக அரசு காவிரி ஆற்றிலிருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 37.9 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது ஆயிரம் மில்லியன் கன அடி ஆகும்) நிலுவை நீரை வழங்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதனிடையே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கர்நாடகாவுக்கு எதிராக வழக்கு தொடுத்தது. இதையடுத்து கர்நாடக அரசு தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. நீரை திறந்துவிட உத்தரவிட்டது.
இதற்கு பா.ஜ.க. மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கர்நாடகாவில் மழைபற்றாக்குறையால் இங்குள்ள விவசாயிகளுக்கே இன்னும் நீர் திறக்கப்படவில்லை. ஆனால் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட்டுள்ளது. காங்கிரஸ் அரசு கர்நாடக விவசாயிகளின் நலனைபாதுகாக்க தவறிவிட்டது. தமிழகத்துக்கு திறக்கப்பட்டிருக்கும் நீரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி கூறுகையில், கர்நாடக அரசுக்கு கர்நாடக விவசாயிகளின் நலனில் அக்கறை இல்லை. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ளது. அவர்களை மகிழ்விப்பதற்காகவே கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு காவிரியில் நீர் திறந்துவிட்டுள்ளது. கர்நாடக அரசு நீரை திறக்காவிடில் அவர்களின் இண்டியா கூட்டணியில் குழப்பம் வரும். கர்நாடக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸூக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும் என கண்டித்துள்ளார்.
இதேவேளை, தமிழகத்துக்கு நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடக விவசாய அமைப்பினர் நேற்று ஸ்ரீரங்கப்பட்ணா அருகே காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக அணைகளில் போதிய நீர் இல்லாத நிலையில் தமிழகத்துக்கு நீரை திறக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசு கர்நாடக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டது என அவர்கள் குற்றம்சாட்டினர்.
No comments