கொழும்புக்குள் நுழைந்துள்ள ஆபத்து: மக்களுக்கு கடும் எச்சரிக்கை
காலி சிறைச்சாலையில் பல கைதிகளின் உயிரை பறித்த மெனிங்கோகோகல் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளி கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நோயாளி ஜா-எல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் எனவும், அவர் இரத்மலானை சுகாதார மற்றும் மருத்துவ பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றில் பணியாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது.
காய்ச்சல் காரணமாக குறித்த நபர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்மலானை சுகாதார வைத்திய அதிகாரி குணதிலக்க தெரிவித்தார்.
இந்த நபர் பணிபுரிந்த இடத்தில் உள்ள சுமார் 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார நிபுணர்களின் தேசிய இயக்கத்தின் தலைவர் சமல் சஞ்சீவ, இந்த பக்டீரியா தொற்றுக்குள்ளான ஒருவரைக் கூட இனங்காணுவது மிகவும் அவசியமானது என தெரிவித்தார்.
நோய் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெற்றோருக்கு ஏற்படக்கூடிய தேவையற்ற அச்சத்தை நீக்கி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, முறையான திட்டத்தை தயார் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments