ஹரியானா கலவரத்தில் 6 பேர் உயிரிழப்பு: டில்லியிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு!
ஹரியாணாவில் கடந்த திங்கள் கிழமை வெடித்த மதக் கலவரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
பொலிஸார் இதுவரை 116 பேரை கைது செய்துள்ளனர். அத்துடன், 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஹரியாணாவில் நடந்த வகுப்புவாத வன்முறையானது, தலைநகர் டில்லியில் இருந்து 20 கிலோ மீற்றர் தள்ளியுள்ள குருகிராம் வரை எட்டியுள்ளது. அங்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறையில் பல கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதன் காரணமாக டில்லியிலும் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கலவரத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்ட குருராமின் சோஹ்னா பகுதியில் அனைத்து அரசு மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹரியணாவின் நு பகுதியில் இடம்பெற்ற வன்முறையைக் கண்டித்து தலைநகர் டில்லியில் உள்ள மெட்ரோ தொடருந்து நிலையம் அருகே வி.எச்.பி. மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகள் கண்ட போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் டில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேவாட் பகுதியில் இடம்பெற்ற வன்முறையைக் கண்டித்து விஸ்வ இந்து பரிஷித் அமைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், வலதுசாரி அமைப்புகளான விஸ்வ இந்து பரிஷித் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகள் மானேசர் பகுதியில் உள்ள பீசம் மந்திரில் மகா பஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
No comments