துனிசியாவில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 41 போ் பலி!
துனிசியா அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 41 போ் உயிரிழந்தனா்.
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலியை நோக்கிச் சென்று கொண்டிருந்த அகதிகள் படகு, சிசிலி நீரிணைப் பகுதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து நால்வரை மால்ட்டா நாட்டு கொடியுடன் பயணித்த ரிமானோ சரக்குக் கப்பலில் இருந்தவா்கள் மீட்டுள்ளனா்.
2 ஆண், ஒரு பெண், பெரியவா்கள் துணை இல்லாத ஒரு சிறுவன் ஆகிய அந்த நால்வரும், இத்தாலியின் கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.
அவா்களை சிசிலி தீவான லாம்பெடுஸாவில் உள்ள முகாமிற்கு இத்தாலிய கடலோரக் காவல் படையினா் புதன்கிழமை அழைத்துச் சென்றுள்ளனர்.
விபத்தில் உயிா் பிழைத்தவா்களிடம் நடத்திய விசாரணையில், கடலில் கவிழ்ந்த படகில் மேலும் 41 போ் இருந்ததாகவும், அவா்கள் அனைவரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவா்களில் 3 சிறுவா்களும் அடங்குவதாக மீட்கப்பட்டவா்கள் கூறியுள்ளனா்.
அண்மைக் காலமாக, துனிசியாவிலிருந்து இத்தாலியை நோக்கிச் சென்ற ஏராளமான அகதிகள் படகுகள் விபத்திற்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை துனிசியா வழியாக 93,000-இற்கும் மேற்பட்டவா்கள் இத்தாலிக்கு கடத்தி வரப்பட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
No comments