யாழ். செம்மணியில் விபத்து: ஒருவர் பலி
யாழ். செம்மணி பகுதியில் ஏ 9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரின் மனைவி படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
தண்ணீர் பௌசர் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
நல்லூர் செம்மணி வளைவிற்கு அருகில் இன்று காலை 9.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மன்னார் - ஆண்டான்குளம் பகுதியை சேர்ந்த 32 வயதான புவனேஸ்வரன் மனோஜ் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், 27 வயதான அவரது மனைவி படுகாயங்களுக்குள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பௌசர் சாரதி ஆகியோரின் கவனயீனமே விபத்திற்கான காரணம் என பொலிஸார் கூறினர்.
இந்த நிலையில், பௌசர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் நாளை (20) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments