உலகம்தமிழர் என்று சொல்லடா..தலை நிமிர்ந்து நில்லடா!: சீனாவில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் கீழடியின் பெருமை..வைரலாகும் புகைப்படம்..!!
பெய்ஜிங்: கீழடி ஆய்வின் மூலம் வெளிவந்து கொண்டிருக்கும் தமிழர்களின் வரலாற்று பெருமைகள் குறித்து சீனாவில் உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருவது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் 7ம் கட்ட அகழாய்வின் மூலம் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நாகரீகத்தின் கல்வி, கலை, நீர் மேலாண்மை போன்றவை குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கீழடி 7ம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 தளங்களிலும் நடந்து வருகிறது. இதில் அகரத்தில் இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு ஏராளமான பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பண்டைய காலத்தில் வைகை ஆறு, கீழடி, அகரம் வழியாக சென்றிருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அங்கு கண்டெடுக்கப்பட்ட பிராமிய எழுத்துக்கள், உறைகிணறு, ஆபரணங்கள் உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் ஆதாரங்கள் அனைத்து தரப்பினரும் அறியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் நாகரீகத்தை விளக்கும் கீழடியின் பெருமை தற்போது சீனா வரை சென்றுள்ளது. அங்குள்ள யுனன் மின்சூ பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மாணவர்களுக்கு கீழடி ஆழ்வில் தமிழர்களின் வரலாற்று பெருமைகள் குறித்து தமிழ் ஆசிரியை நிறைமதி கிகி ஜாங் பாடம் எடுத்ததை தனது முகநூலில் பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை நேரில் பார்வையிட்டு சென்றார். இந்த நிலையில் தன்னுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு கீழடி பெருமை குறித்து பாடம் எடுத்ததாக மிக பெருமையுடன் தனது முகநூல் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். சிவகங்கை டு சீனா என்ற கமெண்டுகளுடன் கீழடி குறித்து சீனாவில் ஆசிரியர் பதிவிடும் படங்களை தொடற்சியாக பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து வருகின்றனர்.
No comments