Header Ads

அமீரக விண்வெளி வீரர்கள் சிறப்பு பயிற்சிக்காக அமெரிக்கா சென்றனர்

 



இது குறித்து துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-


டி 38 ஜெட் விமான பயிற்சி

அமீரகத்தின் பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் ஹசா அல் மன்சூரி மற்றும் சுல்தான் அல் நியாதி. இதில் ஹசா அல் மன்சூரி கடந்த 2019-ம் ஆண்டில் ரஷியாவின் சோயுஸ் விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று வந்தார்.இருப்பினும் அந்த விண்வெளி வீரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சியை பெறுவதற்காக தற்போது அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் அமெரிக்காவின் விண்வெளி ஏஜென்சியான நாசாவின் கீழ் செயல்படும் ஜான்சன் விண்வெளி மையத்தில் அவர்களுக்கு கடந்த 9 மாதங்களாக மேம்படுத்தப்பட்ட சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் விண்வெளி பயணத்தின்போது தாங்கள் அமர்ந்து பயணம் செய்யும் விண்கலத்தில் உள்ள இருக்கையை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் நுட்பங்கள் கற்றுத்தரப்பட்டது. அதேபோல நாசாவின் அதிநவீன டி 38 ஜெட் விமான பயிற்சியும் வழங்கப்பட்டது.

அமெரிக்கா சென்றனர்

இந்தநிலையில், கடந்த ஆண்டில் 2-வது கட்ட விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்ட முகம்மது அல் முல்லா மற்றும் நோரா அல் மத்ரூசி ஆகியோர் சிறப்பு பயிற்சிக்காக அமெரிக்காவின் ஹுஸ்டன் நகருக்கு சென்றுள்ளனர்.அங்கு அவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்று வரும் ஹசா அல் மன்சூரி மற்றும் சுல்தான் அல் நியாதி ஆகியோரை சந்தித்தனர். இவர்கள் 4 பேருக்கும் வருகிற டிசம்பர் மாதம் முதல் 30 மாத சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் விண்வெளியில் நடப்பது மற்றும் விண்கலனில் இருந்து உயிர்தப்பி பிழைப்பது உள்ளிட்ட முக்கிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் அல்லது பூமியில் தரையிறங்குபோது ஏற்படும் இடர்பாடுகளில் உயிர்தப்பி பிழைப்பது குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் சர்வதேச விண்வெளி மையத்தின் கணிணி செயல்பாடுகள், புதிய கருவிகளை பொருத்துதல், அங்கு ரோபோக்களை கையாளுதல் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

No comments

Powered by Blogger.