ஈஸ்டர் தாக்குதல்: இரகசிய வாக்குமூலம் வழங்கும் மெளலவி ஆசிர்யர்கள்!
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் குறித்தான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இரு மெளலவி ஆசிரியர்கள் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி நீதிவானுக்கு இரகசிய வாக்கு மூலம் ஒன்றினை வழங்கவுள்ளனர்.
குற்றவியல் சட்டக் கோவையின் 127 ஆவது அத்தியாயத்தின் கீழ் இந்த வாக்கு மூலத்தை வழங்க, அவ்விளம் ஆசிரியர்கள் இருவர் சார்பிலும் கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கையினை முன்வைத்து அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையிலேயே எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி அவ்வாக்கு மூலங்கள் பெற நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட, புத்தளம் - கரை தீவு அல் சுஹைரியா மத்ரஸாவின் ஆசிரியர்களாக செயற்பட்டதாக கூறப்படும் 26,27 வயதுகளை உடைய மொஹம்மட் ஜவ்பர் லுக்மான் ஹகீம், மொஹம்மட் நசுருத்தீன் மொஹம்மட் வசீர் ஆகியோர் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவ்விருவரும், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்விற்கு எதிராக சாட்சியளிக்க சி.ஐ.டி.யினரால் வற்புறுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் சார்பில் உயர் நீதிமன்றில் இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 7 ஆம் திகதி அம்மனுக்கள் பரிசீலனைக்கு வந்த போது, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் குறித்த இரு மெளலவி ஆசிரியர்கள் சார்பிலும் விஷேட விடயங்களை முன்வைத்திருந்தார்.
அதன்படி அவ்விருவரும் கடந்த 15ம் திகதி கோட்டை நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்க ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவ்விருவரும் அறிய முடியாத இரு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 15ம் திகதி கோட்டை நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போதும் அன்றைய தினம் கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே விடுமுறை என்பதால், நேற்று 17 ஆம் திகதிவரை அது ஒத்தி வைக்கப்பட்டது.
இந் நிலையில் நேற்று இம்மனு விசாரணைக்கு வந்த போது,
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 7 ஆம் அத்தியாயம் பிரகாரம், சந்தேக நபரை வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என கூறப்பட்டாலும், பயங்கரவாத தடை சட்டத்தின் 7 (2) ஆம் பிரிவின் கீழ் இந்த இரு சந்தேக நபர்களையும் மன்றில் சி.ஐ.டி.யினர் ஆஜர் செய்துள்ளதால், சட்டத்தின் பிரகாரம் அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவான் நியாயமான சந்தேகம் தொடர்பில் திருப்தி அடைய வேண்டும் என்ற விடயத்தை வைத்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், தனது சேவை பெறுநர்களான குறித்த இரு மெளலவிமாருக்கும் எதிராக எந்த சான்றுகளும் இல்லாத நிலையில் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட முடியாது என்னும் வாதத்தை எழுத்து மூலம் சமர்ப்பித்தார்.
இந் நிலையிலேயே, தற்போது குறித்த இரு மெளலவிமாரும் கொழும்பு சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில் எதிர்வரும் முதலாம் திகதி, ஏற்கனவே வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய இரகசிய வாக்கு மூலம் வழங்க அவர்கள் ஆஜர் செய்ய நீதிவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்துள்ளார்.
முன்னதாக புத்தளம் - கரை தீவு அல் சுஹைரியா மத்ரஸாவின் மாணவர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கிய குற்றச்சாட்டில் மத்ரஸா பாடசாலை ஆசிரியர்களான குறித்த இருவரும் கடந்த மார்ச் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அப்போதைய சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்திருந்தார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments