Header Ads

இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா உதவி!


 இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பணியாற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கு அவசியமான முகக்கவசங்கள், பாதுகாப்புக்கண்ணாடிகள், கையுறைகள் மற்றும் ஒட்சிசன் மட்டத்தைக் கணிக்கும் கருவிகள் உள்ளடங்கலாகப் பெருமளவான சுகாதாரப்பாதுகாப்பு உபகரணங்கள் அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இலங்கையிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ளும் நடவடிக்கையில் இலங்கை மக்களுடன் தொடர்ந்து துணைநிற்பதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது.

அந்தவகையில் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக அமெரிக்க மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட கொவிட் - 19 கட்டுப்பாட்டிற்கு அவசியமான சுகாதாரப்பாதுகாப்பு பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இலங்கையிலுள்ள அமெரிக்கத்தூதரக அதிகாரி மார்ட்டின் கெலியினால் இன்றையதினம் (நேற்று) சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியநிபுணர் எஸ்.எச்.முனசிங்கவிடம் கையளிக்கப்பட்டன. இந்த உபகரணங்கள் கடந்த சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தன.

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவ ஆரம்பித்ததிலிருந்து அதனை கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் அமெரிக்காவும் இலங்கையும் மிகநெருங்கி செயற்பட்டு வருகின்றன. இந்தத் தொற்றுநோய்ப்பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய சேதத்தை நாம் உணர்கின்றோம்.

இந்நிலையில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, இந்த சுகாதாரப்பாதுகாப்பு உபகரணங்களை இயலுமானவரை விரைவில் இலங்கையிடம் கையளித்திருக்கிறோம் என்று இதன்போது மார்ட்டின் கெலி தெரிவித்தார்.   

இலங்கை உள்ளடங்கலாக தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு சுமார் 7 மில்லியன் தடுப்பூசிகளைப் பகிர்ந்தளிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக கடந்த வியாழக்கிழமை வெள்ளைமாளிகையிலிருந்து வெளியான அறிவிப்பைத் தொடர்ந்தே தற்போது இந்த அத்தியாவசிய சுகாதாரப்பாதுகாப்பு உபகரணங்கள் இலங்கையை வந்தடைந்திருக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு உதவும்வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து அமெரிக்கா 6 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கியிருப்பதுடன் 200 செயற்கை சுவாசக்கருவிகளையும் (வென்டிலேட்டர்) வழங்கியிருக்கிறது.  

இலங்கைப் பிரஜைகளின் சுகாதாரநலனை உறுதிசெய்வதற்காகக் கடந்த 20 வருடகாலத்தில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தினால் சுமார் 26 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவிவரும் நெடுங்காலத்தொடர்பாக இதனைக் குறிப்பிடமுடியும்.

இந்நிலையில் மேற்படி நன்கொடையானது 240 000 கே.என்-95 முகக்கவசங்கள், 40 000 பாதுகாப்புக் கண்ணாடிகள், 600 000 சோடி கையுறைகள், நோயாளிகளின் ஒட்சிசன் மட்டத்தை அளவிடுவதற்கான கருவிகள் (ஒக்சிமீற்றர்) 1 200 ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.