நந்திக்கடலில் மரணத்தை கடந்த நிமிடங்கள்.......
அன்று மே 17ம் திகதி அதிகாலை மூன்றுமணியிருக்கும்.
ஊடறுப்பு அணிகளுடன் நந்திக்கடல் நடுவே கழுத்துமட்டத்தண்ணீருக்குள் சில நூறு தலைகளில் நானுமொருவன் நின்றுகொண்டிருந்தேன். அங்கு சிறியரக படகில் இயந்திரம் இல்லாமல் கேப்பாப்புலவு இராணுவ முன்னரங்கம் நோக்கி தடை உடைக்க அனுப்பப்பட்ட எமது அணிகளின் தொடர்பிற்காய் காத்திருந்தோம்.
ஆனால் எதிர்பார்த்ததிற்கு நேரெதிர்மாறாக அதிகாலையில் நான்கு பக்கத்திலும் முப்படைகளின் உதவியுடன் அணல்பறக்கும் உக்கிரமான சண்டை தொடங்கியது. ஊடறுத்து முன்நகரமுடியாதவாறு உடைப்பு நடவடிக்கை அசாத்தியமானது. இறுதி யுத்தத்தின் எமது கடைசி ஊடறுப்பு நடவடிக்கையும் முறியடிக்கப்பட்டுவிட்டதால் எமது ஆயுதப்போராட்டத்தின் அடுத்தகட்ட நிலை என்ன? என்ற வலிசுமந்த ஏக்கத்தோடு மீண்டும் முள்ளிவாய்க்கால் நோக்கி நகரவேண்டிய நிலை ஏற்பட்டது.
நேரம் நான்குமணியை தாண்டி மெல்ல நகர்ந்துகொண்டே சென்றது. இராணுவத்தின் பரா வெளிச்சத்தின் நடுவே தலைகள் குறிபார்க்கப்படுகின்றன . துப்பாக்கி ரவைகள் சரமாரியாக செவிப்பறைகளை கிழிக்கின்றன. நீருக்குள் தலையை அமுழ்த்தி எவ்வளவுநேரம் இருக்கமுடியும் அப்படியிருந்தால் நீரில் மூச்சுத்திணறி இறக்க நேரிடும்.
தலையைத்தூக்கினால் துப்பாக்கி ரவைகளாள் மரணம் நிகழும். இதற்கிடையில் இரண்டுக்கும் நடுவே இரண்டுநிமிட நித்திரைக்காக தண்ணீரில் கண்மூடித்தூங்கிய அந்த நிமிடங்கள் நந்திக்கடலில் மரணத்தை கடந்த நிமிடங்களாகவே நெஞ்சில் பதிந்திருக்கின்றன. நிமிர்ந்து படுத்தபடி மூக்கும் வாயும் வெளியே தெரிய அயர்ந்து தூங்கிய அந்த நிமிடம் மரணத்தைப்பார்த்து மரணத்தோடு விளையாடிய நினைவுகள் நந்திக்கடலில் மரணத்தை கடந்த நிமிடங்களாகவே பதிவுசெய்யப்படுகின்றது.
மரணபயம் மாணிடத்தின் பிறப்பு. ஆனால் முற்றும் இழந்தநிலையில் அதாவது இனி இழப்பதற்கு எதுவுமே இல்லையென்ற நிலையில் துறவறத்தை துறந்து மரணத்தைத்தேடி மரணத்தோடு விளையாடிய அந்த நிமிடங்களும் இரண்டுநிமிட உறக்கத்தைத்தேடிய தருணங்களும் நந்திக்கடலில் மரணத்தை கடந்த நிமிடங்களாகவே நெஞ்சில் நினைவிருக்கும். ஆம் நாம் விரும்பியோ விரும்பாவிட்டாலோ முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றோம்.
நேரம் காலை ஐந்து மணியை நெருங்குகின்றது. இறந்தவர்களையும் ,கையில் சிக்கிய காயப்பட்டவர்களையும், இறுகப்பற்றியவாறு போகுமிடம் தெரியாமல் மீண்டும் மேற்கு முள்ளிவாய்க்கால் நந்திக்கடற்கரையை வந்தடைந்தோம். ஒரு சிறிய வெளிச்சத்தில் பெரும்பாலானோர் ஒன்றுசேர்ந்தோம்.
ஒருவரையொருவர் இனம் கண்டுகொள்வதே மிகக்கடினம். இருந்தும் தெரிந்த முகங்களுடன் பேச வார்த்தைகள் வர மறுத்தன. அர்த்தங்கள் நிறைந்த மௌனமொழியால் வார்த்தைகள் தடுமாற உடையில் ஊறிய நீர்வடிய நின்ற அதேநேரம், நாம் நகர மாற்றுவழியின்றி வழிதேடிய வினாடிகள் நந்திக்கடலின் மரணத்தை கடந்த நிமிடங்களாகவே காட்சியளித்தன.
வெடியோசையின் வெளிச்சத்தில் அருகில் வந்த தளபதி ஜெயம் அவர்கள் கூறியது! ஏற்கணவே தீர்மானிக்கப்பட்டதன்படி நானும் அவரும் வவுனியாவில் ஒரு ஆழ்கூற்றில் சந்திப்பதாக ரட்ணம் மாஸ்ரர் சொல்லியிருந்தார். அதனை முள்ளிவாய்க்காலில் மீண்டும்..... என்ற வார்த்தையுடன் அவர் கூறிய இறுதிவரிகள் நந்திக்கடலில் மரணத்தை கடந்த நிமிடங்களாகவே கலைந்துபோனது. அதேபோல் அரசியல்த்துறை பொறுப்பாளர் திரு நடேசன் தளபதி பிரபா ஆகியோர் கேட்ட கேள்விகளும்,
எதிர்பார்ப்பும், மாற்றத்திற்கான மாற்றுவழியின்மையையே எடுத்துக்காட்டியதோடு மரணத்தின் விளிம்பில் புலம்பிய வினாடிகள் நந்திக்கடலின் மரணத்தை கடந்த நிமிடங்களாகவே என்னால் பார்க்கமுடிகின்றது. அதற்கும் மேலாக ரட்ணம் மாஸ்ரரிடம் நான் கேட்ட கேள்விகளும், அவர் சொன்ன பதில்களும் உயிர் உள்ள எனது இதயநாடிகள் உணர்விளந்து உயிரற்றசடலமாய் செத்து வீழ்ந்து செய்வதறியாது திணறிய அந்த இறுதிக்கணங்கள் நந்திக்கடலின் மரணத்தை வென்ற நிமிடங்களாகவே பதியப்படுகின்றன.
நெஞ்சில் உரமிக்க விடுதலைத்தீயினை சுமந்து மக்களோடு இணைந்து பயனித்த மாபெரும் வரலாற்று நாயகனின் வழிநடந்த எம் விடுதலைப்போராட்ட அக்கினிப்பிரவேசம் அடுத்தகட்ட நகர்வின்றி நந்திக்கடலில் அணைந்து போகுதே...! என்ற மரணத்தின் விநாடிகளே நந்திக்கடலின் மரணத்தை கடந்த நிமிடங்களாக வரலாற்றுப்பதிவாகின்றன . ஆம் 2009 மே 17ம் நாள் மாலைப்பொழுது நெருங்கிவருகின்றது, பக்கத்தில் சுற்றத்தில் ஓரிரு தலைகள் மட்டுமே என் கண்களில் தெரிகின்றன.
வெடியோசை ஒரு நொடி அமைதியாய் இருந்தது. பிணம்தின்னிக்களுகுகள் மக்களோடு ஒன்றறக்கலந்ததும் எம் துப்பாக்கிகள் குறிபார்ப்பதை நிறுத்தின. இதயநாடிகள் ஒடுங்குகின்றன உயிர்நாடி ஒருநொடிநின்று மீண்டும் துடிக்க ஆரம்பிக்கின்றது. உயிரற்ற சடலமாய் என் பாதங்கள் நகரத்தொடங்கின. நந்திக்கடலிலே மூழ்கிப்போனதா?
தமிழரின் விடுதலைத் தீ வீறுகொண்டெழுந்து, கடாரம் வென்ற சோழனையும் , பண்டாரவன்னியனின் வாளெடுத்து போர்செய்த மாபெரும் தலைவன் எங்கே? என்று தேடிய விழிகளில் இருண்டன கண்கள். குறுட்டு வெளிச்சத்தில் நடக்கின்றோம் இன்றுவரை நந்திக்கடலின் மரணத்தை கடந்த நிமிடங்களின் நினைவுகளுடன்.
நன்றி (இது ஒரு போராளியின் பதிவிலிருந்து.....) த .கதிரவன்
No comments