சிங்கள இனவெறி அரசு தமிழ் மக்களை இனவழிப்புச்செய்த கறுப்பு நாள்
அன்பார்ந்த தமிழின மக்களே !
இன்று மே 17ம் நாள். எமது மக்கள் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட நினைவு நாள். சிங்கள இனவெறி அரசு தமிழ் மக்களை இனவழிப்புச்செய்த கறுப்பு நாள். எமது மக்களை சின்னாபின்னமாக்கி அவர்களின் உரிமைகள், சொத்துகள் யாவும் சூரையாடப்பட்ட துயர நாள். சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசு பன்னாட்டு உதவியுடன் எம்மக்களை இனவழிப்புச்செய்த இன் நூற்றாண்டின் கொடிய நாள். விடுதலைப்புலிகளின் ஆயுத மௌனிப்பிற்க்கு பின்னர் தமிழினத்தை ஈவிரக்கமின்றி அழித்தொழித்த பௌத்த மிதவாத மகிந்த அரசு மறுநாளே சிங்களதேசத்தின் வெற்றிநாளாக மே 18ம் நாளை அறிவித்த அதேசமயம் மே 18ம் நாளை தமிழர்களின் துக்கநாளாக தமிழர்கள் பிரகடனப்படுத்தியிருந்தனர். இனவழிப்பின் இன்றைய நினைவு நாளை தமிழர்கள் கடைப்பிடிக்கவே முடியாதவாறு மகிந்த பரம்பரையின் குடும்ப ஆட்சிமுறை மீண்டும் கோத்தபாய அரச பயங்கரவாதத்தின் வடிவில் இராணுவ அடக்குமுறைகளை பயன்படுத்தி இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்நெடுத்து வருகின்றதென்பதனை இன்றைய இனவழிப்பு நினைவு நாளில் மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகின்றோம். குறிப்பாக 12/05/2021 அன்று இரவு சிங்கள இராணுவத்தின் திட்டமிட்ட இன ஒடுக்குமுறையை எடுத்துக்காட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் பிரதேசம் முழுமையாக இராணுவமயமாக்கப்பட்டமையும், நினைவுத்தூபி உடைத்தெறியப்பட்டமையும், புதிய நினைவுக்கல் அகற்றப்பட்டமையுமானது சிங்களக்காடையர்களின் நயவஞ்சகப்போக்கையும், இனவன்கொடுமையையும் வெளிப்படுத்தியிருக்கின்றது. அதேநேரம் 2009ம் ஆண்டு நடாத்திய இனவழிப்பை மீண்டும் கண்முன் நிறுத்திய இனச்சுத்திகரிப்பின் ஓர் அங்கமாகவே தமிழர்களாள் அவதானிக்கமுடிகின்றது. எந்த இனவழிப்பிற்கெதிராக நாம் எழுந்து போராடினோமோ அதே இனவழிப்பை மீண்டும் தமிழர்கள் மீது திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றது. தமிழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்க தொடர்ந்தும் அதே இனவழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதை உடனடியாக நிறுத்தவேண்டுமென இனவழிப்பு நாளாகிய இன்று சர்வதேச நாடுகளிடம் முன்வைக்கவிரும்புகின்றோம்.
இனவழிப்பு என்பது ஒரு இனத்தின் மொழி,கலை,கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள் யாவும் திட்டமிட்டு அழிக்கப்படுவதும் இனவழிப்பிற்குரிய இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளேயாகும். எமது இனத்தை அழிக்க பல்வேறு வழிகளில் எழுபது வருடங்களுக்கு மேலாக சிங்கள இனவெறி அரசுகள் செயற்பட்டு வருகின்றதென்பதனை இவ்விடத்தில் ஆழமாகப்பதிவுசெய்ய விரும்புகின்றோம். 1956இல் தனிச்சிங்களச்சட்டத்தை அமுல்படுத்திய ஜே . ஆர் ஜயவர்தனவின் பௌத்த இனவாத போக்கை முன்நிறுத்தி மகிந்த, கோத்தபாய அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றதென்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அந்தவகையில் எமது தமிழ்மொழி திட்டமிட்டு புறத்தொதுக்கப்பட்டு மொழிச்சிதைவினை ஏற்படுத்தும் சமநேரத்தில், சிங்களமொழி அரசமொழியாக்கி மொழித்திணிப்பு மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அத்தோடு பௌத்த மதகொள்கையை பின்பற்றும் சீனமொழிக்கு இலங்கையில் உயிர்ப்பூட்டம் செய்யப்படுகின்றது. மொழி அழிந்தால் இனம் அழியும் என்ற இயற்கைநியதியின்படி தமிழ்மொழி அழிக்கப்பட்டு வருகின்றது என்பதனை இனவழிப்பு நாளாகிய இன்று ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்.மேலும் புணரமைப்பு என்ற பெயரில் தமிழர் தாயகபூமியெங்கும் பௌத்தவிகாரைகள் நிறுவப்படுவதும் ,அகழ்வாராச்சி என்றபெயரில் தமிழரின் வரலாற்று நூல்கள்,கல்வெட்டுகள்,தொல்லியல் ஆதாரங்கள்யாவும் அழிக்கப்படுகின்றன. காணி பகிர்ந்தழிப்பு சட்டமுறைமையை தமக்கு சாதகமாகப்பயன்படுத்தி வடகிழக்குத்தமிழர் பிரதேசமெங்கும் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றதின் மூலம் நில ஆக்கிரமிப்பை சிங்களப்பேரினவாதம் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றது. இவையாவும் திட்டமிட்ட இனவழிப்பிற்குரிய செயற்பாடாகவே தமிழர்களாள் பார்க்கப்படுகின்றது. தொடர்ந்தும் தமிழினம் அழிக்கப்பட்டு வருகின்றதென்பதனை இனவழிப்பு நாளாகிய இன்று வெளிப்படுத்தவிரும்புகின்றோம். பௌத்த சிங்களப்பேரினவாத அரசின் அனுசரனையோடு சிங்களப்படைகளாள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வடகிழக்குத்தளுவிய இராணுவ ஆட்சிமுறை 1956ம் ஆண்டை கண்முன்நிறுத்திய தனிச்சிங்களப் பௌத்த நாடென்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சிங்கள ஏகாதிபத்திய கொடுங்கோள் அரசின் செயற்பாடுகளில் அன்றுதொடக்கம் இன்றுவரை எவ்விதமான மாற்றங்களும் நிகழவுமில்லை,நிகளப்போவதில்லை. ஆகவேதான் தமிழரின் இனப்பிரச்சனை விடையத்தில் சிங்கள அரசிடம் பேசிப்பயனில்லை என்பதை உணர்ந்த மனிதநேயத்தின் மாபெரும் அருட்தந்தை மதிப்புக்குரிய இராஜப்பு யோசப் ஆண்டகை அவர்கள் தெரியப்படுத்தியிருந்தார். தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு சர்வதேசத்தின் மூலமே தீர்வுகாணப்படவேண்டும் என்று கூறியதோடு, இனவழிப்பு சாட்சியங்களை புள்ளிவிபரத்தோடு சர்வதேச சமூகத்தின் முன் கோடிட்டுக்காட்டியிருந்த நேரடி சாட்சியத்தையும் இழந்து நிற்கும் தமிழினம்,இராணுவ ஒடுக்குமுறைக்குள் குரல்வளை நசுக்கப்பட்டு நிர்க்கதியாக நிக்கின்றது என்பதை இனவழிப்பு நாளாகிய இன்று சர்வதேச சமுகத்திடம் தெரியப்படுத்த விரும்புகின்றோம்.
இலங்கைத்தீவில் வடகிழக்குப்பிரதேசத்தில் மட்டும் இராணுவ ஆட்சிமுறை நடைபெறுவதை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கண்டுகொள்ளத்தவறுவதேன்? கொறோனா பரவலை இராணுவத்தின் அரசியல் இராஜதந்திரமாகப் பயன்படுத்தி,வடகிழக்குத்தமிழர் தாயகபூமியெங்கும் இனவழிப்பு நினைவுநாளை தடைசெய்யும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற இராணுவ ஆட்சிமுறையை உடனடியாக விலக்கவேண்டுமென சர்வதேசத்தின் முன் எம்மக்கள் நீதிவேண்டி நிக்கின்றார்கள். உலக அரங்கில் மனிதநேயம்பற்றி பேசுகின்ற வல்லாதிக்க அரசுகள் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனையில் தலையிட்டு ஐ ,நா சபையின்னூடாக தமிழ்மக்களின் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டுமென இன்றைய நாளில் வேண்டிநிற்கின்றோம். மேலும் எமது போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்துவரும் தொப்புள்கொடி உறவுகளான தாய்த்தமிழக மக்களே! அன்றுதொடக்கம் இன்றுவரை ஈழத்தமிழரின் உரிமைப்போராட்டத்திற்கு ஆதரவளித்த எம் சொந்தங்களே! தொடர்ந்து இனவழிப்பிற்கு நீதிவேண்டியும், எமது சுயநிர்ணய விடுதலைப் போராட்டத்தை அங்கிகரிக்கக்கோரியும், சர்வதேசத்தின்கதவுகள் திறக்கும்வரை தொடர்ந்து எம்மோடு தோழ்கொடுத்து போராடுமாறு போரன்புரிமையுடன் வேண்டிநிக்கின்றோம். சமநேரத்தில் தமிழ்நாட்டில் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் அரசு தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இனவழிப்பை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தி நீதியை பெற்றுக்கொள்ள உதவுமாறு உரிமையுடன் வேண்டிநிக்கின்றோம்.
எமது அன்பிற்கும்,மதிப்பிற்குமுரிய தமிழ் மக்களே! சிங்கள இனவெறி அரசபடைகளாள் தமிழர் பிரதேசமெங்கும் பேயாட்சி நடைபெற்றுவருகின்றது. குறிப்பாக வடகிழக்குத்தாயகபூமியில் தமிழர்களின் எழிச்சியை சிதைத்து, முடக்கும் நோக்கில் சிங்களப்படைகளாள் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவ ஆட்சிமுறை தமிழர்களுக்கு எதிரானதாகவே அமைகின்றது. அதேநேரம் மறுபுறத்தில் கொறோனா பரவலை கவனத்திற்கொண்டு இவ்வருடம் எம்மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் சுடரேற்றி அத்தீபத்தின் ஒளியில் உறவுகளை நினைவுகூறுமாறு பேரன்புரிமையுடன் வேண்டிநிக்கின்றோம். உலகத்தில் உள்ள ஒன்பது கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒவ்வொருவருடைய வீடுகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தீ ஒளிரட்டும். அவை இணையத்தளங்கள் ஊடாக பரவட்டும். இருண்ட சர்வதேசத்தின் கண்கள் விழிக்கும்படியாக மிளிரச்செய்யட்டும். மின்சாரம் இல்லாத உலகில் ஒரு நாள் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுத்தீயில் சர்வதேசம் எம்மை திரும்பிப்பார்க்கும்படியாக உலகத்தமிழர் அனைவரது வீடுகளிலும் இலட்சியத்தீபம் சுடர்விட்டெரிந்து இனவழிப்பை உலகறியச்செய்யும். அதேநேரம் சிங்கள இனவெறி அரசின் மே18 வெற்றிநாளை தமிழர்தேசத்தின் கறுப்பு நாளாகவும், தமிழர்களின் துக்கநாளாகவும் தமிழர் வரலாறு பதியட்டும்.
நன்றி
வே . பகலவன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
இணைப்பாளர்
உலகத் தமிழ் இளையர் ஒன்றியம்
தமிழீழம்
No comments