இராணுவ சோதனைச் சாவடிகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட தகவல்
இராணுவ சோதனை சாவடி இருப்பது எமது வசதிக்காகவே என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இன்று வவுனியாவிற்கு வருகை தந்திருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா என்பது இலங்கையில் மாத்திரமல்ல எல்லா நாடுகளிலுமே தற்போது பாரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. சில நாடுகளில் பார தூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் இந்தியாவையும் குறிப்பிடலாம், ஆனால் இலங்கையை பொறுத்தவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும் சில கவனக்குறைவு காரணமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இருந்த போதும் இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் எடுத்து வருகின்றது.
அதே போன்று விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களை கூட கட்டுப்படுத்தி இருக்கின்றது. வெளிநாடுகளில் இருந்து பரவுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தாலும் கூட அவ்வாறு நடைபெறாமல் குறைக்கப்பட்டுள்ளது. முழுமையாக கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முழுமையாக முடக்குவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.
எமது நாடு மட்டுமல்லாது அனைத்து நாடுகளுமே தங்களது நாட்டினை முடக்கும் நிலைக்கு உட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாத்திரமே அந்த அரசாங்கங்கள் முடக்கி வருகின்றன. அவ்வாறு நாட்டினை முடக்கும் சந்தர்ப்பத்தில் நாடு பட்டினியில் மரணிக்க வேண்டி வரும். அதற்காகத்தான் எமது அரசாங்கம் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை சுகாதார முறைகளில் பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
குறிப்பாக வீதியிலே இருக்கின்ற இராணுவ சோதனைச் சாவடிகளில் இராணுவத்தினர் முகக்கவசம் அணியாதவர்களை மறித்து அணிந்து செல்லுமாறு அறுவுறுத்தி வருகின்றனர். மேலும் இராணுவச்சோதனை சாவடிகள் எங்களுக்கு வசதியாக இருப்பதுடன் நாங்கள் அதனை வசதியாக மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர அதனை கெடுபிடி என்று நோக்கக்கூடாது. அவர்களை முகக்கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்து வருகின்றனர்.
அதனை சொல்லுவதற்கும் ஒருவர் தேவைதானே அதனைத்தான் அவர்கள் செய்து வருகின்றனர். ஆகவே சோதனைச் சாவடி இருப்பதால் முகக்கவசம் அணிய வேண்டும் என அனைவரும் கவனமாக இருப்பார்கள். அத்தோடு சோதனைச் சாவடிகளை நிரந்தரமாக்க வேண்டிய தேவை இல்லை.
இதன்போது மாகாணசபை தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளரினால் கேட்கப்பட்டபோது தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் கொண்டு வரப்பட்ட அரசாங்கத்திற்கு மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்குரிய வாய்ப்பு கிடைத்த போதும் அவர்கள் தேர்தலை ஒத்தி வைத்தார்கள். ஆனால் எங்களுடைய அரசாங்கத்தைப் பொறுத்தவரை தேர்தலை எந்தளவு விரைவாக நடாத்தலாமோ அந்தளவு விரைவாக நடாத்துவதுதான் நோக்கமும் கொள்கையுமாக இருக்கின்றது.
அந்த வகையில் மாகாண சபை தேர்தலை நடாத்துவதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், கொரோனாவை ஒரு காரணமாக வைத்துக்கொள்ளலாம். கடந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தலின் போதும், நாடாளுமன்ற தேர்தலின் போதும் கொரோனா பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை.
இன்று இத்தொற்று நோய் அதிக பிரச்சனையாக உள்ளமையால்; அதனை கருத்தில் எடுக்க வேண்டும். அதனை விட புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா தேர்தலை நடாத்துவதா என்ற முடிவுக்கு வரவில்லை. இது தொடர்பான கலந்துரையாடல்கள் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றது.
புதிய முறையில் தேர்தல் நடாத்துவதாக இருந்தாலும் அல்லது பழைய முறையில் தேர்தல் நடாத்துவதாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. ஏனென்றால் இது தொடர்பான சட்டத்தை திருத்த வேண்டும். பழைய முறையில் தேர்தல் நடாத்துவதாக இருந்தால் அதற்கு காலம் போகாது.
ஆனால் புதிய முறையில் தேர்தல் நடாத்துவதாக இருந்தால் எல்லை நிர்ணய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அதற்கு நிறைய காலம் எடுக்கும்,. சிலவேளைகளில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது மாத்திரமல்லாது சர்வஜன வாக்கெடுப்பிற்கும் போக வேண்டி வரும். அதன் அடிப்படையில் இந்த தேர்தலை விரைவாக நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் தமக்குள்ளேயும், எதிர் தரப்பினருடனும் கலந்துரையாடி வருகின்றது என தெரிவித்தார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments