சர்வஜன வாக்கெடுப்பு, 2/3 பெரும்பான்மை அவசியம்
கொழும்பு துறைமுகநகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலத்தில் காணப்படும் சில சரத்துகள், அரசியலமைப்பை மீறுவதாக வியாக்கியானம் செய்துள்ள உயர் நீதிமன்றம், அந்தச் சில சரத்துகளை நிறைவேற்ற, சர்வஜன வாக்கெடுப்பும் மூன்றில் இரண்டுப் பெரும்பான்மையும் அவசியமெனக் குறிப்பிட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த, கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலம் தொடர்பான வியாக்கியானத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நேற்று (18) சபைக்கு அறிவித்தார்.
அந்த வியாக்கியானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சட்டமூலத்தின் வாசகங்கள் 3(6), 30(3) இரண்டாம் காப்பு வாசகம், 55(2) மற்றும் 58(1) ஆகியவற்றின் ஏற்பாடுகள், அரசியலமைப்பின் 12(1)ஆம் உறுப்புரைக்கு முரணாக உள்ளதுடன், அரசியலமைப்பின் 84(2)ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பெரும்பான்மையுடன் மாத்திரமே வலிதாக நிறைவேற்றப்பட முடியும்.
“ஆயினும், உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டவாறு வாசகங்கள் திருத்தப்படின், சொல்லப்பட்ட முரண்பாடுகள் இல்லாதொழியும். அந்த வகையில், உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சில ஏற்பாடுகள், விசேட பெரும்பான்மையுடன் மாத்திரமே நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன், மேலும் சில உறுப்புரைகள், மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கிகரிக்கப்பட்டாலும் மாத்திரமே நிறைவேற்றப்பட முடியும்.
அதிகார இடப்பரப்புக்கு வெளியே ஆனால், இலங்கையின் ஆள்புலத்தினுள்ளே நடத்தப்படும் ஒத்த வியாபாரங்களுக்குத் தடையாக, கொழும்புத் துறைமுக நகரத்தின் அதிகார இடப்பரப்புக்கு வெளியே வியாபாரத்தில் ஈடுபடும் போது, இந்த சட்டமூலத்தின் கீழ் வழங்கப்படும் ஏதேனும் விலக்களிப்புகள் அல்லது ஊக்குவிப்புகள் அத்தகைய அங்கீகரிக்கப்பட்ட ஆள் பயன்படுத்துவதைத் தடுக்கும் புதிய சட்ட வாசகமொன்று சட்டமூலத்தின் வாசகம் 37க்கு சேர்க்கப்பட்டால், சொல்லப்பட்ட முரண்பாடுகள் இல்லாதொழியும்” எனவும், உயர்நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளது.
சட்டமூலத்தின் எஞ்சியுள்ள வாசகங்கள், அரசியலமைப்புடன் முரணாக இல்லையென உயர் நீதிமன்றம் தீர்மானித்திருந்ததாகவும் நேற்றைய தினத்துக்கான நடவடிக்கைகளின் அதிகாரபூர்வ அறிக்கையுடன், உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் அச்சிடப்பட வேண்டுமென கட்டளையிடுவதாகவும், சபாநாயகர் கூறினார்.
இதேவேளை, இச்சட்டமூலம் மீதான விவாதம், இன்றும் (19) நாளையும் (20) சபையில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளதுடன் நாளை பிற்பகல் நான்கு மணிக்கு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments