Header Ads

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை -இந்தியா



கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியா எந்த ஏற்றுமதி தடையும் விதிக்கவில்லை என இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புது டில்லியில் உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சமீபத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கு எந்தவொரு ஏற்றுமதி தடையும் விதிக்கவில்லை என தெளிவாகக் கூறியதாகக் குறிப்பிட்டார்.

உலகின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள பல நாடுகளுக்கான தடுப்பூசி ஏற்றுமதி கடந்த வாரமும் நடந்துள்ளன என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மேலும் எந்தவொரு நாடும் தனது சொந்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும்போது, உலக நாடுகளுக்கு தடுப்பூசிகளை இவ்வளவு பெரிய அளவில் பகிர்ந்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் இருந்து பரிசாக முறையாக அங்கீகரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளின் வருகை, இலங்கையில் உள்ள பயங்கரமான தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை செலுத்தும் திட்டம் தொடங்குவதற்கு உதவியது என்றும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் நெருங்கிய நண்பராகவும், அண்டை நாடாகவும் உள்ள இந்தியாவில், கொரோனா தடுப்பூசி செலுத்த ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலே, இலங்கை மக்களும் பயனடையத் தொடங்குவதை இந்தியா உறுதி செய்தது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.25 மில்லியனுக்கும் அதிகமான டோஸ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிஷீல்ட் தடுப்பூசி இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், இரண்டாவது கொரோனா அலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளமையால், தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவலை தெரிவித்த இந்தியா, எவ்வாறிருப்பினும் தடுப்பூசிகளுக்கு எந்தவொரு ஏற்றுமதி தடையும் விதிக்கவில்லை என்றும், தடுப்பூசிகளின் உற்பத்தி மேலும் அதிகரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

No comments

Powered by Blogger.