Header Ads

மணிவண்ணன் பிணையில் விடுதலை!


இலங்கையில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முற்பட்டமை தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், நீதவான் நீதிமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் நீதவான் ஏ.பீற்றர் போல் மணிவண்ணனை விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

மணிவண்ணனுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

யாழ். மாநகரத்தைச் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கும் பொருட்டு, மாநகர சபையினால் மாநகர காவல் படை ஒன்று நேற்றுமுன்தினம் தமது பணியை ஆரம்பித்தது. இதற்குப் பிரத்தியேகமாக சீருடை ஒன்றும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த காவல் படை மற்றும் சீருடை குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் சில இணைய ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தன.

விடுதலைப் புலிகளின் காவல் துறையின் சீருடைய ஒத்ததாக மாநகர காவல் படையின் சீருடை இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனிடம் நேற்று இரவு யாழ்ப்பாணம் பொலிஸார் ஆறு மணித்தியாலங்கள் விசாரணையை முன்னெடுத்தனர்.

இதன்பின்னர், விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சிப்பதாகக் கூறி மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், வவுனியாவில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் விசாரணை அலுவலகத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையில் மணிவண்ணன் பயங்கரவாதச் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டமைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன.

அத்துடன், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டதுடன் அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்சும் இது குறித்துக் கவலை வெளியிட்டிருந்தார்.

இந்த சூழலில், இலங்கை நேரப்படி இன்று மாலை மணிவண்ணன் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.