நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 274 பேர் நேற்று(செவ்வாய்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான சவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 250 பேரும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 24 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 88 ஆயிரத்து 512 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 84 ஆயிரத்து 20 ஆக காணப்படுகிறது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 402 பேர் குணமடைந்த நிலையில் நேற்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 371 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 3 ஆயிரத்து 11 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 534 ஆக அதிகரித்துள்ளது
No comments