வடக்கிற்கு மறுக்கப்பட்ட அதிகாரங்கள் கிடைத்துள்ளமை இணக்க அரசியலுக்கான இன்னுமொரு வெற்றி- டக்ளஸ்
வடக்கு மாகாணத்திற்கு இதுவரை காலமும் வழங்கப்படாமல் இருந்த அதிகாரங்கள் தற்பேர்து கிடைத்துள்ளமை தேசிய நல்லிணக்க பொறிமுறைக்கு கிடைத்த இன்னுமொரு வெற்றி என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களின் மனங்களில் நம்பிக்கை வலுப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு வழங்கப்படாமல் இருந்த அதிகாரங்கள் கடற்றொழில் அமைச்சரின் முயற்சி காரணமாக வழங்கப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கிற்கும் தெற்கும் இடையிலான இடைவெளியை குறைத்து தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தன்னால் கட்டி வளர்கக்ப்பட்டுள்ள தேசிய நல்லிணக்கமே சிறந்த வழிமுறை என்பதை வரலாறு அவ்வப்போது நிரூபித்து வருகின்ற நிலையில் வடக்கு காணி ஆணையாளருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றமை தன்னுடைய கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.
காணித் திட்டங்களை அங்கீகரித்தல், காணிக் கச்சேரிகளை நடத்துவதற்கான திகதிகளைத் தீர்மானித்தல், தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்கல்> சிதைவடைந்த அனுமதிப் பத்திரங்களுக்கு பதிலாக புதிய அனுமதிப் பத்திரங்கள் வழங்கல், காணிகளை பிள்ளைகளுக்கு பங்கிடுதலின்போது அனுமதிப் பத்திரங்களை வழங்கல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய எட்டு மாகாணங்களிலும் மாகாண காணி ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனினும், வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு குறித்த அதிகாரங்கள் இதுவரை காலமும் வழங்கப்பட்டிருக்கவில்லை. இதுதொடர்பாக காணி அமைச்சர் உட்பட்ட சம்மந்தப்பட்ட தரப்புக்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த அதிகாரங்கள் வடக்கு மாகாணக் காணி ஆணையாளருக்கு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தியிருந்தார்.
கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களில் காணப்பட்ட நியாயத்தினை ஏற்றுக் கொண்ட சம்மந்தப்பட்ட தரப்புக்கள், ஏனைய எட்டு மாவட்டங்களின் காணி ஆணையாளர்களுக்கும் வழங்கியுள்ள காணி அதிகாரங்களை வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கம் வழங்கி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments