Header Ads

"வருகிறது மர்ம வைரஸ்" என்று முதலில் எச்சரித்த மருத்துவர்! வுஹான் நகர மக்கள் அஞ்சலி



 குமாரதாஸன்.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுகின்றது என்பதை அந்நாடு உறுதி செய்வதற்கு முந்திய சில நாட்களில் இது நடந்தது. 2019 டிசெம்பர் பிற்பகுதி.
அந்த மனிதர் சீனாவின் வுஹான் நகர மருத்துவமனையின் கண் சிகிச்சை மருத்துவர். லீ வென்லியாங் (Li Wenliang) என்பது அவர் பெயர்.உலகத்துக்கு மிகப் பெரிய ஆபத்து வருகின்றது என்பதை முன்னமே உணர்ந்தவர். அது பின்னர் நடந்தும் விட்டது.
மர்ம நோய் ஒன்று வருகிறது என்று தனது மக்களை எச்சரித்ததோடு பல உயிர்களைக் காப்பாற்றிவிட்டு அதே நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தவர் லீ.
"வருகிறது வைரஸ் ஆபத்து" என்று அந்த மனிதன் சொன்னபோது வதந்தி பரப்புவதாக சீனப் பொலீஸ் எச்சரித்தது.
மூச்செடுக்க சிரமப்பட்டவாறு பலர் வுஹான் மருத்துவமனைக்கு வந்தபோது ஆஸ்பத்திரி நெறிமுறைகளின்படி அந்தத் தகவல் ரகசியமாகப் பேணப்பட்டது. ஆனால் இளம் மருத்துவர் லீ 'சார்ஸ்' (SARS) வகையான மர்மத் தொற்று நோய் ஒன்று பரவி வருகிறது என்பதை உணர்ந்து அத் தகவலை- மருத்துவ விதிகளை மீறித்- தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டார். அந்தச் செய்தி வைரலாகப் பரவியது.
இணையத்தில் வதந்தி பரப்பி மக்களிடையே பதற்றத்தை உண்டுபண்ணுகிறார் என்று பொலீஸார்
அவர் மீது முறைப்பாடு பதிவு செய்தனர்.
"நான் அப்படி நினைக்கவில்லை. நம்பினேன். அதிகாரிகள் அதனை உறுதிப்படுத்தும்வரை காத்திராமல் ஓடிப்போய் நிறைய மாஸ்க் வகைகளை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டேன்." - என்கிறார் யுஹான் நகரில் வசிக்கும் ஜீ பென்குய் (Ji Penghui).
"... உண்மையில் வைரஸின் மூலம் எது என்பது இன்னும் கூடத் தெரியாது. ஆனால் அதன் தொற்றை முதலில் அறிவித்து ஆபாய மணி அடித்த மருத்துவரை அவரது பணிகளுக்கு அப்பால் இன்னும் அதிகமாக மதிப்பளிக்கவேண்டும் என நினைக்கிறேன்... "
-இவ்வாறு அவர் மேலும் சொல்கிறார்.
வருமுன் காக்கும் எச்சரிக்கையை வெளியிட்ட அந்த 34வயதான இளம் மருத்துவர் அடுத்த சில நாட்களில் - கடந்த ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி வைரஸ் தொற்றி மூச்சு விட முடியாத நிலையில் உயிரிழந்தார். அவரது எச்சரிக்கையைப் போலவே மரணத்தையும் சீன அதிகாரிகள் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர்.
தொற்றுக் குறித்து முதலில் எச்சரித்தவர் அவரே என்று புகழ் பெற்ற தொற்று நோயியலாளர் ஜாங் நன்ஷான்(Zhong Nanshan) நேர்காணல் ஒன்றில் லீ வென்லியாங் பற்றிக் குறிப்பிட்டு "சீனாவின் நாயகன்" என்று அவரை வர்ணித்தார். அப்போதுதான் உலகம் அவர் பக்கம் திரும்பியது.
சீனா பின்னர் சந்திக்க நேர்ந்த அவலங்கள் மக்கள் மனங்களில் அந்த மருத்துவரை ஒரு ஹீரோவாக மாற்றிவிட்டன. அவரது மரணம் அரசு மீதான ஆத்திரமாகவும் உணர்வெடுத்து அடங்கியது.
கொரோனாவுக்கு எதிரான "யுத்தத்தின் நாயகர்கள்" என்று பலரது பெயர்களை சீன அதிபர் கடந்த நவம்பரில் நடந்த ஓர் உத்தியோக பூர்வ நிகழ்வில் அறிவித்து கௌரவித்தார் .அதில் கண் மருத்துவர் லீ வென்லியாங்கின் பெயர் இல்லை.
மறைந்து ஓராண்டு முடிந்த பிறகும் மருத்துவர் லீயை சீன அரச நிர்வாகம் ஏன் மறக்கடிக்கின்றது என்பதற்கு எந்த விளக்கங்களும் இல்லை.
சில தினங்களுக்கு முன்னர் அவரது மருத்துவமனைக்குச் சென்ற ரோய்ட்டர் படப்பிடிப்பாளர் ஒருவர் வாசலில் தடுக்கப்பட்டார். ஆஸ்பத்திரி தரிப்பிடக் காவலர்கள் எனக் கூறிக் கொண்ட இருவர் படப்பிடிப்பாளரை உள்ளே செல்ல விடாது தடுத்துத் திருப்பி அனுப்பினர் என்று ரோய்ட்டர் செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது.
வைரஸ் விவகாரத்தை சீனா ஆரம்பத்தில் கையாண்ட விதம் சரியா என்பது குறித்த விமர்சனங்களுக்கு மருத்துவர் லீ தொடர்பான விவகாரத்தை மேற்குலக ஊடகங்கள் சாதகமாகப் பயன்படுத்தி வருவதை சீன அரசு விரும்பவில்லை. அதற்காகவே அவர் தொடர்பான தகவல்கள் மறைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
கொரோனா வைரஸை ஆரம்பத்தில் உலகமும் ஊடகங்களும் "சீன வைரஸ்" என்று பெயரிட்டு அழைத்ததை தனது வரலாற்றில் ஒரு மோசமான அவமானமாக சீனா கருதுகின்றது.
தனது நாட்டில் முதலில் கண்டறியப் பட்டிருப்பினும் வைரஸின் ஆரம்ப இடம் - மூலம் - உலகின் வேறு ஒரு பகுதிதான் என்பதை நிரூபிப்பதற்கு சீனா படாதபாடு படுகிறது.
இன்று பெப்ரவரி 7 மருத்துவர் லீயின் முதலாண்டு நினைவு நாள்.
லீ பணியாற்றிய மருத்துவமனை அமைந்துள்ள வுஹான் நகரில் வழமை வாழ்க்கை திரும்பி விட்டது. ஆனாலும் மருத்துவமனையைச் சூழவுள்ளவர்கள் இன்னமும் லீயை நினைவில் போற்றிக் கொள்கின்றனர்.
சீனாவில் அவரை நினைவுகூருகின்ற இளையோரது பதிவுகள் அவரது சமூகவலைத் தளமான Weibo வில் குவிகின்றன.சீனாவை விமர்சிப்பதற் காக மருத்துவரின் விவகாரத்தை மேற்குலக ஊடகங்கள் கையாளும் விதத்தையும் சிலர் தமது பதிவுகளில் கண்டிக்கின்றனர்.
ருவீற்றர் தளத்துக்கு நிகரான சீனாவின் முக்கிய சமூகவலைத்தளம் Weibo. அங்கு சமூகவலைத்தளப் பதிவுகள் தீவிர தணிக்கைகளுக்குப் பிறகே பரவ அனுமதிக்கப்படுகின்றன.
"... லீ நீங்கள் அமைதியாக உறங்குங்கள். நாங்கள் இப்போது நன்றாக இருக்கிறோம். சீனாவில் தொற்றை கட்டுப்படுத்தி விட்டோம். நான் எனது இரண்டாவது தடுப்பூசியை நேற்றுப் பெற்றுக்கொண்டேன்..." - என்று ஒருவர் தனது அஞ்சலிப் பதிவில் எழுதுகிறார்.
"ஹாய் டொக்டர்.. நான் அடுத்த ஆண்டு மருத்துவக் கல்லூரிக்கு செல்கிறேன். என்னை ஆசீர்வதியுங்கள்..." - என்று இன்னொருவர் எழுதுகிறார்.
இவ்வாறு சீனாவின் 'நெற்றிசன்கள்' மத்தியில் இளம் மருத்துவர் லீ வென்லியாங்கின் (Li Wenliang)புகழ் நிலைத்து விட்டது.

No comments

Powered by Blogger.