எச்சரிக்கை!! வைரஸ் தொற்றுப் பரிசோதனை : போலி அறிக்கைகள் புழக்கத்தில்!
குமாரதாஸன்.
வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் போலியான சோதனை ஆவணங்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன என்று ஐரோப்பிய பொலீஸ் சேவையான 'ஈரோபொல்' (Europol) எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே எல்லை தாண்டிய பயணங்களின் போது பிசிஆர் என்கின்ற வைரஸ் சோதனை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை பல நாடுகள் கட்டாயமாக்கி உள்ளன.
இதனை அடுத்தே போலியான வைரஸ் சோதனை ஆவணங்களை (negative Covid-19 tests) ரகசியமாக விற்பனை செய்கின்ற முயற்சிகள் இடம்பெற்று வருவதாக 'ஈரோபொல்' அறிவித் துள்ளது.
இங்கிலாந்திலும் பிரான்ஸிலும் போலி பரிசோதனை ஆவணங்களை விமானப் பயணிகளுக்கு தபால் மற்றும் இணைய வழிகளில் விற்பனை செய்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சிலர் கைது செய்யப் பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப் படுகிறது.
உயர்ந்த தரம் வாய்ந்த வைரஸ் பரிசோதனை அறிக்கைகளை ஒத்த வடிவங்களில் போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்கு தற்போதைய அச்சு மற்றும் இலத்திரனியல் நுட்பங்களைப் பயன்படுத்த முடியும் என்பதால் எதிர்காலத்தில் இது ஒரு பெரும் குற்றச் செயலாகப் பரவுவதற்கு வாய்ப்புள்ளது-என்று நெதர்லாந்தின் ஹேக் நகரைத் தளமாகக் கொண்ட 'ஈரோபொல்' பொலீஸ் சேவையினர் எச்சரித்துள்ளனர்.
பாரிஸ் விமான நிலையத்தில் பிரபல பரிசோதனைக் கூடம் ஒன்றினது பெயரில் போலியான வைரஸ் பரிசோதனை அறிக்கைகளைப் பயணிகளுக்கு விற்பனை செய்தவர்கள் எனக் கூறப்படும் ஏழு பேரை பொலீஸார் கடந்த நவம்பரில் கைது செய்திருந்தனர்.
போலி மருத்துவ அறிக்கை ஒன்றிற்கு 150 முதல் 300 ஈரோக்கள் வரை அறவிடப்படுவது தெரியவந்துள்ளது. அவசரமாக விமானப் பயணங்களில் ஈடுபடவேண்டிய கட்டாயம் உள்ள பயணிகள் சட்டவிரோத முகவர்களிடம் இவ்வாறு போலி ஆவணங்களை வாங்கி ஏமாறும் நிலைமையும் காணப்படுகிறது.
No comments