Header Ads

யாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்!



யாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் முகாமைத்துவ சபை உறுப்பினரும் வடக்கு மாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவருமான சி.சிவபரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “அண்மையில் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்தில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுவது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் நீண்ட நாட்களாகச் சந்திப்பு இடம்பெற்றுவந்த நிலையில் வடக்கு ஆளுநர் மற்றும் யாழ். மாநகர முதல்வர் ஆகியோர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க, தனியார் போக்குவரத்துச் சங்கப் பேருந்துகள் நாளை (திங்கட்கிழமை) காலை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட பேருந்து நிலையத்திலிருந்து தமது சேவையைத் தொடரவுள்ளன.

எனினும், அந்தச் சேவைக்கு இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துகளும் எமக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அத்தோடு, இ.போ.ச. சாலை முகாமையாளர்கள் மற்றும் பிராந்திய முகாமையாளர் ஆகியோருக்கு வடக்கு மாகாண ஆளுநர், அரச அதிபர் மற்றும் யாழ். மாநகர முதல்வர் ஆகியோர் பூரண விளக்கமளித்து இ.போ.ச. பேருந்துகளையும் அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து இணைந்து சேவையாற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு இணக்கப்பாட்டை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

பொதுமக்களுக்குத் திறம்பட சேவையினை வழங்கும் முகமாக நாளை காலையிலிருந்து புதிதாகத் திறக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் இருந்து தூர இடங்களுக்கான தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் இடம்பெறவுள்ளன.

நாளைய தினம் இ.போ.ச. பேருந்துகளும் தமது சேவையினை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கும் என எதிர்பார்ப்பதுடன், அது தவறும் பட்சத்தில் வட மாகாண ஆளுநர் அதற்குரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்” என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.