Header Ads

பிரான்ஸின் அகதிகளுக்குப் புகலிடம் வழங்கும் நீதிமன்றத்தின் உறுப்பினர் இருவர் பணி நீக்கம்!



குமாரதாஸன்.

பிரான்ஸின் அகதிகளுக்குப் புகலிடம் வழங்கும் நீதிமன்றத்தின் (CNDA) முக்கிய உறுப்பினர்கள் இருவர் பணியில் இருந்து விலகுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்பாடுகளை மீறி உணவகம் ஒன்றில் மறைந்திருந்து உணவு அருந்தியமை கண்டுபிடிக்கப்பட்டு இருவரிடமும் அபராதம் அறவிடப்பட்டதை அடுத்தே தாங்களாகவே பணியை விட்டு விலகிக் கொள்ளுமாறு புகலிடம் வழங்கும் தேசிய நீதிமன்றம் இருவரிடமும் கேட்டிருக்கிறது.
பாரிஸ் நகரின் மத்தியில்-ஈல் து லா சித்தே (le de la Cité) பகுதியில் - பொலீஸ் தலைமையகம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றின் அருகே அமைந்திருக்கும் உணவகம் ஒன்றில் உணவு அருந்திக் கொண்டிருந்த சமயமே இவர்கள் இருவரும் பொலீஸாரிடம் சிக்கினர்.மறைவாக இயங்கிய அந்த உணவகம் உடனடியாக சீல் வைக்கப் பட்டுள்ளது.
இருவரிடமும் பொலீஸார் அபராதம் அறவிட்ட செய்தி ஊடகங்களில் வெளியாகியதை அடுத்தே அவர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் பொது முடக்கம் ஒன்றைத் தவிர்ப்பதற்காக சுகாதார விதிகளைப் பொலீஸார் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கி உள்ளனர். விதிகளை மீறி மறைவாக இயங்குகின்ற உணவகங்களில் திடீர் சோதனைகள் நடக்கின்றன. கடந்த சில நாட்களில் இவ்வாறு 25 க்கு மேற்பட்ட உணவகங்கள் பொலீஸாரிடம் சிக்கி உள்ளன.
புகலிடம் வழங்கும் நீதிமன்றம் (La Cour nationale du droit d'asile - CNDA) பாரிஸ் தமிழர்களால் பொதுவாக "கொமிசன்" என்று அழைக்கப்படுகின்றது.OFPRA என்கின்ற அகதிகள் மற்றும் நாடு இழந்தவர்களைப் பாதுகாக்கும் பிரான்ஸின் அலுவலகத்தினால் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களது முறையீடுகளை இந்த CNDA எனப்படும் புகலிடம் வழங்கும் நீதிமன்றமே விசாரித்துத் தீர்ப்பளிக்கிறது. அதன் நீதி நிர்வாகக் கட்டடம் புறநகரான Montreuil (Seine-Saint-Denis) பகுதியில் இயங்குகின்றது.
இந்த நீதிமன்றத்தின் முக்கிய பதவி நிலைகளைக் கொண்ட இருவரே உணவகத்தில் பிடிபட்டுப் பதவிகளை இழக்கின்றனர்.

No comments

Powered by Blogger.