மனித குலத்தின் தடுப்பு மருந்துகளோடு போட்டி போடும் அளவுக்கு உருமாறிப் பரவும் கொரோனா வைரஸ் !!!
கொரோனா வைரஸ் தொடர்ந்தும் மரபுகளை மாற்றி மாற்றித் தன்னைத் தக்கவைத்து வருகிறது. உயிரியல் ரீதியில் அது இயற்கையான நிகழ்வுதான் என்றாலும் அந்தத் திரிபு மாற்றங்கள் மனித குலத்தின் தடுப்பு மருந்துகளோடு போட்டி போடும் அளவுக்கு உலகை அச்சுறுத்துகின்றன.
மனிதர்களிடையே பரவுகின்ற காலமும் எண்ணிக்கையும் அதிகரிக்க, அதிகரிக்க
வைரஸ் மாறி மாறித் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான மரபு மாற்றங்களை எடுக்கும். எனவே அதனைத் எதிர்ப்பதற்குத் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படவேண்டும் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்பாராததும் கவலைக்குரியதுமான மூன்றாவது திரிபு மாற்றம் ஒன்றைத் தாங்கள் கண்டறிந்துள்ளனர் என்ற தகவலை பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள்
வெளியிட்டிருக்கின்றனர்.
தென்னாபிரிக்கா, பிறேசில் போன்ற நாடுகளில் காணப்படுகின்ற திரிபுகளை பெரிதும் ஒத்த இந்த மூன்றாவது புதிய திரிபு தடுப்பூசிகளை எதிர்க்கத்தக்க வல்லமை கொண்டதாக இருக்கக் கூடும் என்பதை ஆராய்ச்சிகள் காட்டுகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் மற்றும் உலகின் முன்னணி ஊடகங்களில் மூன்றாவது புதிய இங்கிலாந்து வைரஸ் திரிபு பற்றிய இந்தத் தகவல் நேற்று வெளியாகி இருக்கிறது.
கொரோனா வைரஸில் இருந்து மாற்றமடைந்த முதலாவது திரிபு முதல் முறையாக பிரிட்டனின் கென்ற் என்ற இடத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்டது. சாதாரண கொரோனா வைரஸை விட சுமார் எழுபது மடங்கு பரவும் வேகம் கொண்ட அந்தத் திரிபு காரணமாக இங்கிலாந்து மூன்றாவது பொது முடக்கம் ஒன்றைச் சந்திக்க நேர்ந்துள்ளது. ஜரோப்பிய நாடுகள் உட்பட உலகெங்கும் எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அது தற்சமயம் பரவி வருகிறது.
இந்தக் கட்டத்திலேயே புதிய வைரஸ் தொற்றாளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமாக மூன்றாவது வடிவமாற்றம் பெற்ற மேலும் ஒரு திரிபை பிரிட்டிஷ் கேம்பிரிட்ஜ் (Cambridge) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுவரை பாவனைக்கு வந்துள்ள "பைசர்- பயோஎன்ரெக்" உட்பட எல்லா தடுப்பூசிகளும் திரிபடைந்த புதிய வைரஸ்களை எதிர்க்கும் திறன் கொண்டவை என்று அவற்றைத் தயாரித்த நிறுவனங்கள் கூறுகின்றன.
எனினும் வலுக்கூடிய புதிய வைரஸ் கிருமிகளை எதிர்பார்த்து தடுப்பூசியின் திறன்களை அதிகரிக்கின்ற ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
No comments