பிரேசிலில் மூன்றாவது வகை கொரோனா! பயணத்தடை விதிக்கும் பிரித்தானியா January 15, 20210
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் மூன்றாவது வகை திடீர்மாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தென் அமெரிக்காவிலிருந்து வருபவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைய இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்கா மட்டுமின்றி, போர்ச்சுகல், Cape Verde ஆகிய நாடுகளுக்கும் பொருந்தும் இந்த தடை, இன்று அதிகாலை 4 மணியிலிருந்து அமுலுக்கு வருகிறது.
பிரித்தானியா மற்றும் தென் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள திடீர் மாற்றம் பெற்ற புது வகை கொரோனா வைரஸ்களைப் போலவே, இந்த பிரேசில் வகை கொரோனா வைரஸும் பயங்கரமாக பரவக்கூடியது என கருதப்படுகிறது.
இந்த பிரித்தானிய போக்குவரத்து தடை, தென் அமெரிக்க நாடுகளான அர்ஜெண்டினா, பிரேசில், பொலிவியா, சிலி, கொலம்பியா, ஈக்வடார், பிரெஞ்ச் கியானா, கயானா, பராகுவே, பெரு, சுரினாம், உருகுவே மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகளிலிருந்து மற்றும் அந்த நாடுகள் வழியாக கடந்த 10 நாட்களில் பயணித்தவர்களுக்கும் பொருந்தும்.
அதே நேரத்தில், அந்த நாடுகளில் இருக்கும் பிரித்தானியர்கள் மற்றும் அயர்லாந்து குடிமக்கள், மற்றும் வாழிட உரிமம் கொண்ட வெளிநாட்டவர்கள் பிரித்தானியா திரும்ப அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், அவர்கள் தங்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
மேலும், அத்தியாவசிய சரக்குகளை கொண்டு வருவோருக்கும் பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதியளிக்கப்படுகிறது.
இதற்கிடையில், பிரேசில் 10 நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடு என்பதால், பிரித்தானியா பிரேசிலுக்கு விதித்துள்ள தடை, மற்ற நாடுகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments