தமிழகத்தின் ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கான அன்பான வேண்டுகோள்.
எமது பேரன்புமிக்க தமிழ்நாட்டு ஊடக நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் உலகத்தமிழர் இளையோர் ஒன்றியம் சார்பில் முதல் வணக்கம். சுதந்திரம் அடையாத சமூகத்தின் அல்லது ஒரு இனத்தின் ஊடக சுதந்திரத்தை மட்டும்வைத்து சுதந்திரமடைந்ததாக கருதிக்கொண்டு ஊடக தர்மத்தை மீறி நடந்துகொள்ளும் ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கானது இப்பதிவு. எமது இனத்தின் மொழி,கலை, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை அடியொற்றி சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி சமூக மாற்றத்திற்கான, ஒரு இனத்தின் அடிப்படை சுதந்திர விடுதலைக்கான, ஓர் உயரிய அறிவார்ந்த சமூக ஊடகமாகவே ஊடகத்துறை ஊடகத்தர்மத்தோடு செயற்படவேண்டுமென அன்புரிமையுடன் வேண்டிநிற்கின்றோம். ஆளப்படுவோர்களால் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் மூட நம்பிக்கையினை உடைத்தெறிந்து அறிவுலகின் வெளிச்சமாக தமிழினத்தின் விடுதலைக்கான விழிப்புணர்வையே ஊடகவாயிலாக வெளிப்படுத்த வேண்டுமென மிகப்பேரன்புடன் வேண்டிநிற்கின்றோம்.
ஊடக தர்மம் என்பது இயற்கை நீதியோடு ஒன்றரக்கலந்தது. மனித வாழ்வியல் யதார்த்தத்தை காலத்தின் தேவைக்கேற்ப சமூகத்தின் மத்தியில் பிரதிபலிக்கும் ஓர் விம்பமாகவே ஊடகக்கண்ணாடி பார்க்க வேண்டியதொன்றாகும். மாறாக ஆபாசப்படங்களையும், சமூகத்திற்கு ஒவ்வாத விளம்பரங்களையும், நடிகர் நடிகைகளின் அரசியல் நாடகங்களையும் முன்நிறுத்த முயல்வதும் தமிழினத்திற்குசெய்யும் துரோகமாகவே பார்க்கப்படுகின்றது. ஆகவே பல ஊடகங்கள் தற்காலிக பொருளாதார நலன்கருதி ஊடக தர்மத்தை மீறி பல ஊடகங்கள் செயற்படுவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. ஆகவே இச்சொயற்பாடுகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அடுத்து அரசியல் அதிகாரங்கள் உள்ளவர்கள் வெளிப்படுத்தும் அனைத்து விளம்பரங்களையும் பகுப்பாய்வு செய்யாமல் ஊடகங்கள் பிரசுரிக்கும் தகவல்கள் ஊடக தர்மத்தை மீறியதாகவே கருதப்படும். அதாவது தமிழ்நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் இரு பெரும் கட்சியினர் கொடுக்கும் விளம்பரங்களை பகுப்பாய்வு செய்யாமல் உண்மைக்குப்புறம்பான தகவல்களை ஊடகங்கள் சமூகத்தின் மத்தியில் திட்டமிட்டு பரப்புதல் சமூக நல்லொழுக்கத்திற்கும், உண்மையான அரசியல் செயற்பாடுகளுக்கும் மாறானதாகவே அமைகின்றன.
ஆகவே ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் பலத்தை தாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற சுயநல நோக்கத்தோடும், அதிகாரவர்க்கத்தின் அழுத்தத்திற்கும் அடி பணிந்து ஊடகத்துறை செயற்படுமாயின் அவ்வூடகம் தமது பணியிலிருந்து தாமாகவே விலகிச்செல்வதுதான் பத்திரிக்கை தர்மத்தின் யதார்த்தமாகும்.
எமது அன்பார்ந்த ஊடகவியலாளர்களே! ஒரு இனத்தின் முதுகெலும்பாக கருதப்படுவது உற்பத்திப்பொருளாதார முறைமையேயாகும். அந்த வகையில் இந்தியாவில் விவசாயிகளால் புதுடில்லி உட்பட பல பிரதேசங்களில் விவசாய உற்பத்தியை முதன்மைப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாயிகள் போராட்டத்தை முதன்மைப்படுத்த தமிழ்நாட்டு ஊடகங்கள் பல தவறியமை மிகப்பெரும் வரலாற்றுத்தவறாகவே கருதப்படுகின்றது. எனவே குறிப்பிட்ட சில ஊடகங்கள் மட்டுமே விவசாயிகள் போராட்டத்தை முன்னிறுத்தியமைக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
அதேவேளை இயற்கை விவசாயப்பொருளாதார முறைமையை பின்பற்றி தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காக குரல்கொடுத்துவரும் நாம் தமிழர் கட்சியையும், அதன் செயற்பாடுகளையும் வெளிகொண்டு வருவதற்கு தமிழ்நாட்டு ஊடகத்துறையினர் பாகுபாடின்றி செயற்படவேண்டுமென அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். நாம் தமிழர் கட்சியின் வெற்றி நாம் தமிழர் கட்சிக்கு எதிராக செயற்படுபவர்களுக்கும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கும். ஏனெனில் நாம் தமிழர் கட்சி தமிழினத்தின் அடிப்படை உரிமையை மீட்பதற்கான போராட்டப்பாதையையே முன்னெடுத்து வருகிறதென்ற தெளிவையும் அதன் புரிதலையும் தமிழ்நாட்டு ஊடகங்கள் சமூகத்தின் மத்தியில் கொண்டுசென்று சேர்க்குமாறும், அதேநேரம் எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சிக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் உலகத்தமிழர் சார்பில் மிகப்பேரன்புகொண்டு கேட்டுக்கொள்கின்றோம். மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு தமிழின விடுதலைக்காக ஊடகத்துறையினர் நேர்மையாக சொயற்படுவார்கள் என்ற நீண்ட எதிர்பார்ப்புடன் உலகத்தமிழர்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
த.கதிரவன்
இணைப்பாளர்
உலகத் தமிழர் இளையோர் ஒன்றியம்
தமிழீழம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
No comments