Header Ads

’நில அபகரிப்புகளுக்கு எதிரான எங்களது செயற்பாடுகள் தசாப்த பின்னடைவாகும்’ - நீதியரசர் சி.வி. விக்னேஸ்ரவன்



 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான கடந்த 10 வருட காலப்பகுதியில், நில அபகரிப்புக்கு எதிராக நாம் உள்ளூர் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மையானது எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினரான நீதியரசர் சி.வி. விக்னேஸ்ரவன், 

எமக்கு எதிரான நில அபகரிப்புகள் தொடர்பில் நம்பகத்தன்மையான நவீன தொழில்நுட்ப முறைகளில் அமைந்த ஆவணப்படுத்தல் பொறிமுறையும் ஆய்வும் அவசியமாகும் எனத் தெரிவித்துள்ளார். 

'காணி அபகரிப்பு பற்றிய கருத்துப் பரிமாற்றம்' எனும் தொனிப்பொருளில், திருநெல்வேலி  இளங்கலைஞர் மண்டபத்தில் (24/01/2021) நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

'அரசாங்கங்கள் எமக்கு எதிராக மேற்கொண்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையாக நில அபகரிப்பு காணப்படுகின்றது. இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல், எமது நிலங்களை அபகரிப்பதற்கு பல்வேறு உபாயங்களை அரசாங்கங்கள் கையாண்டு வருகின்றன' என்றார்.

நீர்ப்பாசன அபிவிருத்தி என்ற போர்வையில் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் ஊடாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புகளில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இனப்பரம்பலில் செயற்கையான மாற்றம் மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித் அவர் அதன்பின்னர், யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வன்முறைகளின் ஊடாக தமிழ் கிராமங்கள் பலவற்றில் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு அவை முற்றாக சிங்கள மற்றும் முஸ்லிம் கிராமங்களாக இன்று மாற்றப்பட்டுவிட்டன. 

எவ்வளவு வேகமாக நாம் எமது நிலங்களை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதற்கு முல்லைத்தீவு மாவட்டமே சிறந்த உதாரணமாகும் எனத் தெரிவித்த அவர், அந்த மாவட்டத்தில் மக்கள் பயன்பாட்டுக்குரிய நிலப்பரப்பில் ஏறத்தாழ 40 சதவீத நிலம் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது என்றார்.

 நில அபகரிப்புக்கு எதிராக, உள்நாட்டு சட்ட ரீதியாக மேற்கொள்ளக்கூடிய விடயங்களை நாம் முழுமையான அளவில் மேற்கொள்ளவில்லை. அதேபோல, சர்வதேச சட்டம், சர்வதேச மனித உரிமை கட்டமைப்புகள், ஒப்பந்தங்கள், கோட்பாடுகள், போன்வற்றையும் நாம் முழுமையான அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை எனத் தெரிவித்த அவர், இவற்றுக்கு மேலதிகமாக, சர்வதேச ஊடகங்களின் ஊடாக எமக்கு எதிரான நிலஅபகரிப்பை நாம் வெளிப்படுத்த வேண்டும்.  ஐ. நா மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள், வெளிநாட்டு அரசாங்கங்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள், தூதரகங்கள் போன்றவற்றின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திட்டமிடப்பட்ட சிறப்பான  ஆதரவை நாடிய செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்றார். 


No comments

Powered by Blogger.