Header Ads

பிரான்சில் இளவயதினரிடையே தற்கொலை முயற்சிகள் அதிகரிப்பு!



 குமாரதாஸன்

சிறுவர்கள், இளவயதினர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் எச்சரிக்கும் அளவில் அதிகரித்துள்ளன என்று பாரிஸின் பிரபல 'நெக்கர்' (Necker) சிறுவர் மருத்துவமனையின் நிபுணர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

பாரிஸ் மருத்துவமனைகள் சிலவற்றில் கடந்த சில நாட்களாக தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்ட இளவயதினர் நாளாந்தம் ஒருவர் என்ற கணக்கில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொற்று நோய் தொடங்கியதில் இருந்து நாளாந்த வாழ்வு முடக்கங்களால் பெரிதும் மனப் பாதிப்புகளுக்கு உட்பட்டுத் தனித்துப் போயிருக்கின்ற இளவயதினர், தற்கொலை முயற்சி களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தின் பின்னர் எண்ணிக்கை இரண்டு மடங்காகி உள்ளது என்று நேக்கர் மருத்துவமனை யின் சிறுவர் மனநலப் பிரிவின் பணிப்பாளர் (cheffe du service de pédopsychiatrie à l'hôpital Necker) பொலின் சாஸ்ற் (Pauline Chaste) தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் எச்சரித்துள்ளார்.
"15 வயதுக்குக் குறைந்தவர்கள் தங்களுடைய சொந்தப் பாதிப்புகளுடன் மனநலப் பிரிவுக்கு வருகிறார்கள். பாதிப்பின் வெளிப்பாடுகள் அவர்களில் தீவிரமாகத் தெரிகின்றன. பொதுவாக தற்கொலை எண்ணம் கொண்ட சிறுவர்களை நாங்கள் சந்திக்க வேண்டி வருவதில்லை. இப்போது அது அதிகரித்துள்ளது. மனநலப் பிரிவில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது."
" நாடு முழுவதும் தேசிய அளவில் இது ஒரு பிரச்சினையாக இன்னமும் மாறவில்லை. ஆனால் பாரிஸ் பிராந்தியத்தில் எச்சரிக்கும் அளவை
எட்டி உள்ளது "
-இவ்வாறு அந்த மருத்துவ நிபுணர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.