பிரான்சில் வீசப்படும் மாஸ்க்குகளில் சிக்கி அந்தரிக்கும் பறவைகள்!
பயன்படுத்திய மாஸ்க் வகைகளை அவற்றின் நாடாக்களை(straps) வெட்டி விட்டு அல்லது அகற்றிவிட்டு வீசுமாறு பொதுவான வேண்டுகோள் மீண்டும் விடுக்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் கால்களில் மாஸ்க் சிக்கி அந்தரிக்கும் பறவைகள் பல தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதை அடுத்தே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
உலகின் பல பகுதிகளிலும் பறவைகள், சிறிய விலங்குகள் போன்றன கால்களில் மாஸ்க் சிக்கிக்கொள்வதால் நடப்பதற்கும் பறப்பதற்கும் நீந்துவதற்கும் சிரமப்படுகின்ற காட்சிகள் பல சமூக ஊடகங்களிலும் பரவி வருகின்றன.
தொற்று நோய் நெருக்கடியால் மனிதனின் நாளாந்த அத்தியாவசிய பாவனைப் பொருள்களில் ஒன்றாக மாஸ்க் மாறி உள்ளது. ஒருதடவை பயன்படுத்துகின்ற மாஸ்க் வகைகள் பாவித்த பிறகு கண்ட இடங்களிலும் வீசப்படுவதால் சூழல் மாசடைவதோடு பறவைகள், விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
மாஸ்க்கை காதில் மாட்டிக் கொள்ளப் பயன்படுகின்ற நூல் போன்ற பகுதி (straps) மிக இலகுவாகப் பறவைகளது கால்களில், கழுத்தில் சிக்கிக் கொள்வது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை உரிய கழிவு சேகரிக்கும் இடங்களில் போடவேண்டும். அல்லது அவற்றின் நாடாக்களை வெட்டி விட்டோ அகற்றி விட்டோ வீச வேண்டும் என்று இங்கிலாந்தின் வன உயிரின உரிமை பேணும் அமைப்பு ஒன்று மீண்டும் கேட்டிருக்கிறது.
No comments