நினைவுத்தூபி இடிப்பின் பின்னணியில் அரசு -வெளிவரும் பகிரங்க குற்றச்சாட்டு
இலங்கையில் மீண்டும் அச்சசூழல் உருவாகியுள்ளது.பலவீனமாகவுள்ள சிறுபான்மையினரை அச்சுறுத்தி அவர்கள் மீதான தாக்குதலை ராஜபக்சக்களின் அரசு முன்னெடுத்து வருகிறது என்பதற்கு அண்மைய சான்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதாகும்
இவ்வாறு சாடியுள்ளார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தற்போதைய ஜனாதிபதி 2005-2015 காலப் பகுதியில் பாதுகாப்புச் செயலராக இருந்த போது மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டபிறகு மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை முக்கியமான பொறுப்புகளில் நியமித்துள்ளார், பொதுமக்களைக் கொலை செய்த சில இராணுவ வீரர்களுக்கு அவர் மன்னிப்பும் வழங்கியுள்ளார்.
முன்னர் நடைபெற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட செயற்பாட்டாளர்கள், செய்தியாளர்கள், சட்டத்தரணிகள் மட்டுமின்றி பொலிஸ் விசாரணைகளை நடத்தியவர்களும் மௌனமாக்கப்பட்டுள்ளனர்.
“இலங்கையில் எச்சரிக்கை மணிகள் தெளிவாக ஒலிக்கின்றன. எனவே ஐ நா மனித உரிமைகள் கவுன்சில் புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டியது மிகவும் அவசியம். அதன் மூலம் எதிர்காலத்தில் குற்றஞ்சாட்டி வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது அதற்கு தேவைப்படும் ஆதாரங்களைச் சேகரித்து அதைப் பாதுகாப்பது, அரசைத் தொடர்ந்து கண்காணிப்பது ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும்“
எனவே உறுப்பு நாடுகள் இலங்கை அரசு தற்போது அளித்துள்ள போலி வாக்குறுதிகளால் ஏமாறாமல் இருக்க வேண்டும், மற்றும் அண்மையில் அங்கு நடைபெற்று வரும் விஷயங்களை கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் மீனாட்சி கங்குலி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
No comments