Header Ads

கொரோனா வைரஸ் தொற்று: இலங்கை அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது



 கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான சதவீதத்தில், இலங்கை அபாயக் கட்டத்தை எட்டியுள்ளதென, உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வின்படி தெரியவந்துள்ளது என, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

'அந்த வகையில் பார்க்கும் போது, கொரோனா வைரஸ் தொற்றுவது 5.5 எனும் விளிம்பு நிலை சதவீதத்தைக் கடந்துவிட்டது' என, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்  மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்தார். 

இந்த நேர்மறை சதவீதமானது, ஒரு மாதத்துக்கு முன்பாக 3.0 மட்டத்தில் இருந்தது. அதன்பின்னர் 4, 5 ஆகிய மட்டங்களை மிகவிரைவாகக் கடந்து, 5.5 சதவீதத்தில் உள்ளது எனத் தெரிவித்த அவர், இது அபாயகரமான நிலையாகும் என்றார். 

எவ்வாறாயினும் வைரஸ் தொற்று இன்னும் சமூகத்திலிருந்து வெளியாகவில்லை. குணமடைந்த அனைத்து நோயாளர்களும் மினுவங்கொட, பேலியகொட கொத்தணிகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தொற்று நோயியல் பிரிவு கூறியுள்ளது.

அண்மைய தொற்றுகள், மேற்படி இரு கொத்தணிகளுடனும் தொடர்புபட்டவை என்றும் துரதிர்ஷ்டவசமாக மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு வைரஸ் பரவலைத் தடுக்க நாடு தவறிவிட்டது என்றும் அவர் கூறினார். 


எனவே, இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகமான உப- கொத்தணிகள் உருவாகத் தொடங்கியுள்ளன என்றும் இதைத் தடுப்பதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் இல்லையேல், பாதகத்தை சந்திக்க வேண்டி வருமென அவர் மேலும் கூறினார். 


இதேவேளை,  25 மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று வியாபித்துள்ளதெனத் தெரிவிக்கும், கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் நேற்று (24) காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 724 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில், 331 பேர் மேல் மாகாணத்திலும்  ஏனைய 393 பேர் வெளிமாகாணங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில், கொழும்பு 1 முதல் 15 வரையான அனைத்திலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பை அடுத்து 
கண்டியில் அதிகளவான தொற்றாளர்கள் உள்ளனர்.


இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 57,586 தொற்றாளர்களில் 8,046 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 49,260 பூரண குணமடைந்துள்ளனர் என அந்நிலையம் அறிவித்துள்ளது

No comments

Powered by Blogger.