இலங்கையில் கட்டாயமாக 18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி
சரத் வீரசேகர அவர்கள் தமிழ் மாணவ மாணவியர் தமிழர்கள் மூலமாக இராணுவப் பயிற்சி வழங்க இணங்குவாரானால் நான் அவரின் கருத்தை வரவேற்பேன் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், சிங்கள மொழி பேசும் அலுவலர்களை அனுப்ப நினைத்தால் எமது மாணவ மாணவியர் அல்லது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பயிற்சிகளைப் புறக்கணிப்பார்கள் எனவும் கூறினார்.
வைஸ் அட்மிரல் கௌரவ சரத் வீரசேகர அவர்கள் இலங்கையில் கட்டாயமாக 18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்று கருத்து வெளியிட்டிருக்கின்றாரே. அது தொடர்பில் கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வடக்கு - கிழக்கு தமிழர்களைப் பொறுத்த வரையில் நான் அந்தக் கருத்தை வரவேற்கின்றேன் எனவும் ஆனால் 16 வயதிலிருந்து எமது சகல மாணவ மாணவியரும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் எனவும் கூறினார்.
அவர்களுக்கு தமிழ்ப் பேசும் அலுவலர்களே பயிற்சி கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், ஆணைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
போதிய தமிழ்ப் பேசும் அலுவலர்கள் இராணுவத்தில் இல்லை என்றால் முன்னாள் தமிழ் போராளிகளுக்கு இந்தப் பணியை செய்யச் சொல்லி அவர்களுக்கு ஊதியமும் வழங்கலாம் எனத் தெரிவித்த அவர், எந்த விதத்திலும் சிங்களம் பேசுவோரோ சிங்கள மொழியிலோ எமது மாணவ மாணவியருக்குப் பயிற்சி அளிக்கப்படக் கூடாது எனவும் பயிற்சியாளர்களுக்குத் தட்டுப்பாடு இருந்தால் தென்னிந்தியாவில் இருந்து தமிழ்ப் பயிற்சியாளர்களை வரவழைக்கலாம் எனவும் கூறினார்.
'1958ஆம் ஆண்டில் றோயல் கல்லூரியின் இராணுவப் பயிற்சி பெற்ற மாணவப் படையின் அங்கத்தவராக காலி மைதானத்தில் சுதந்திர தின அணி வகுப்பில் பங்குபற்றியதன் பின்னர் சுதந்திர தின வைபவங்களைப் புறக்கணித்தே வருகின்றேன். காரணம் 1956ம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டம் தமிழ்ப் பேசும் மக்களின் சுதந்திரத்தைப் பறித்து விட்டது. எமக்கு சிங்கள அரசியல்வாதிகளிடம் இருந்து விடுதலை கிடைத்து நாட்டு மக்கள் சம உரிமையுடன் ஒன்று சேர்ந்து வாழ வாய்ப்பளித்தால்த்தான் தமிழர்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடலாம்.
'இராணுவப் பயிற்சி சுய கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் மேம்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் இவ்வாறு பயிற்சி பெற்ற இலங்கையின் போர்ப் படையினரே கட்டுப்பாட்டை இழந்து ஒழுக்கத்தை மீறி மனித உரிமை மீறல்களிலும் இனப்படுகொலைகளிலும் ஈடுபட்டனர் என்பது உலகம் அறிந்த விடயம்' எனவும், அவர் கூறினார்.
No comments