முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்!
பாரிஸ் குற்றவியல் நீதிமன்றம், முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி (Nicolas Sarkozy) மீதான இலஞ்ச ஊழல் வழக்கின் விசாரணை, 2020 நவம்பர் 23, திங்கட்கிழமை இடைநிறுத்தியதையடுத்து (26/11/2020) நாளை வியாழக்கிழமை மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கவுள்ளது.
விசாரணை 2020 நவம்பர் 23, திங்கள் முதல் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை இடம்பெறவிருந்தது.
ஆனால் விசாரணையில் முக்கிய புள்ளியான முன்னாள் மூத்த நீதிபதி (Gilbert Azibert) கில்பர்ட் அசிபெர்டுக்கு மருத்துவச் சோதனை இடம்பெறுவதால், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2007ஆம் ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் பிரசாரச் செலவுக்கு சட்டவிரோதமாக பணம் பெற்றுக் கொண்டதாக நிக்கோலா சார்க்கோசி மீது குற்றம் சாட்டப்பட்டது.
2014ஆம் ஆண்டு நடந்த அந்த விசாரணை தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ள நீதிபதிக்கு நிக்கோலா சார்க்கோசி கையூட்டு கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் நிக்கோலா சார்க்கோசிக்கு பத்தாண்டு சிறைத்தண்டனையும், ஒரு மில்லியன் யூரோக்களுக்கு அதிகமாக அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது
No comments