Header Ads

இனவாதிகள் இவ்வாட்சியின் கதானாயகன்களாக இருக்கும் வரை....




முஸ்லிம் சமூகமே சாறனை மடித்து கட்டி, ஆட்சியை கவிழ்த்து, வீட்டுக்கு அனுப்பிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினுடைய காலத்தில் ஒரே ஒரு கலவரமே நடைபெற்றிருந்தது. நாம் எல்லோரும் செங்கம்பள விரிப்பு விரித்து, வரவேற்ற இவ்வாட்சியில், மூன்று கலவரங்கள் நடைபெற்று முடிந்து விட்டன. இதில் வியப்பதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. இவ்வாட்சியில் தானே இனவாதிகளுக்கு ராஜ மரியாதை வழங்கப்பட்டுள்ளது. இனவாதிகளுக்கு ராஜ மரியாதை வழங்கப்படுகையில் இனவாத கலவரங்கள் அதிகரிக்காமல் விட்டால் தான், ஆச்சரியப்பட வேண்டும்.

இலங்கையில் இனவாதம் நூற்றாண்டு காலமாக தொடர்கின்ற போதும், நூல் உரு உட்பட பல வடிவங்களில்  நவீன இனவாத சிந்தனையை உட்புகுத்தியதில் அமைச்சர் சம்பிக்கவின் பங்கு அளப்பரியது. அவருடைய செயற்பாடுகள் தான், இன்று இனவாத தீயாக கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்கின்றது என்றாலும் தவறில்லை. இன்றைய ஆட்சியில் ஒரு ஆணியை பிடுங்கி எறிவதாக இருந்தாலும், அவரிடம் அனுமதி பெற்றாக வேண்டும். இப்படியான ஆட்சியில் இனவாதம் மேலோங்கி இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினுடைய காலத்தில் இடம்பெற்ற அளுத்கமை கலவரத்தின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படுவதோடு, இவரே அதற்கு நடவடிக்கை எடுக்காமல் தடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் சம்பிக்க போன்றோர் விதைத்த இனவாத சிந்தனைகளை சாதாரண பாமர மக்களிடமிருந்து வெளிக்கொண்டுவர பயன்படுத்தப்பட்ட ஒரு கருவி தான் ஞானசார தேரர். இவர்கள் இருவரும் இணைந்து செயற்பட்டதாக  ஒரு தடவை அமைச்சர் சம்பிக்கவே ஏற்றுக் கொண்டுள்ளார். ஞானசார தேரருக்கு பெரிய ஆப்பு வைப்பது போன்று அனைத்தையும் வெளியில் காட்டிவிட்டு, இப்போது அவருக்கு இருந்த வெளிநாட்டு தடை உட்பட அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் தற்போதைய கண்டி கலவரம் உச்ச அளவில் சூடு பிடித்து கொண்டிருந்த நிலையிலேயே, இது நடைபெற்றிருந்தது. எமது சிந்தனைகள் வேறு பக்கம் சென்று கொண்டிருந்த போது இவ்வாட்சி மீதான விமர்சனங்கள் எழாத கன கச்சிதமாக நடைபெற்றுள்ளது. இவ்வாறான சில வேலைகளை நடத்தி கொள்வதற்காகத் தான், இது போன்ற கலவரம் நடந்ததா என்றும் சிந்திக்க தோன்றுகிறது.

இந்த கலவரத்தில் ஞானசார தேரர் நேரடி தாக்கம் செலுத்தாது போனாலும் சம்பவ இடங்களுக்கு அருகாமையில் தான் இருந்துள்ளார். அதாவது அவர் அமைதியாக இருக்க வேலை நடைபெற வேண்டும். இதுவும் பலவாறான செய்திகளை எம்மை அறியச் செய்து கொண்டிருக்கின்றது. இக் கலவரத்தில் ஞானசார தேரர் மற்றும் அமைச்சர் சம்பிக்க ஆகியோர் நேரடி தாக்கம் செலுத்தாது போனாலும் மறைமுக தாக்கம் செலுத்துகிறார்கள் என்பதே வெளிப்படையான உண்மை.

No comments

Powered by Blogger.